அதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்துவதற்காக அதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்று. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சரியாகப் பராமரிக்கப்படவில்லையென சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

7 தளங்களில் 5, 70,000 புத்தகங்களுடன் இயங்கிவரும் இந்த நூலகத்தில் கடந்த சில மாதங்களாக சீரமைப்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.

இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பயன்படுத்துவதோடு, வாசகர்கள் வீட்டிலிருந்து தங்கள் புத்தகங்களையும் எடுத்துவந்து இங்கே வைத்துப் படிப்பதற்கான அறைகளும் உள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, லேப் – டாப், மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதி ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை

தரைத் தளத்தில் ஓர் அறையும் முதலாவது தளத்தில் ஓர் அறையும் என இரு அறைகளிலும் சேர்த்து இருநூறு பேர் வரை அமர்ந்து படிக்க முடியும்.

துவக்கத்திலிருந்தே மாணவர்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்றிருந்த இந்த வசதியைப் பயன்படுத்துவதற்காக தினமும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் முயற்சிப்பதால், இடத்தைப் பிடிப்பதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே மாணவர்கள் தற்போது காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

தங்களுடைய புத்தகத்தை எடுத்துவந்து படிப்பதற்காக வெகுதூரத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்?

“வீட்டில் இருந்து படித்தால், திடீரென டிவி பார்க்கத் தோன்றும். படுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால்தான் இங்கே வந்துவிடுகிறேன்” என பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ராஜேஷ் பிபிசியிடம் தெரிவித்தார். இவர் தண்டையார்பேட்டையிலிருந்து படிப்பதற்காக இங்கே வருகிறார்.

காலை ஆறு மணிக்கே சுமார் நூறு பேர் வரை நூலக வாசலில் திரண்டுவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தற்போது நூலக நிர்வாகம் ஆறரை மணியளவில் பிரதான நுழைவாயிலைத் திறந்து வளாகத்திற்குள் வாசகர்களை அனுமதித்து வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை

அதன் பிறகு காத்திருப்பவர்களுக்கு எண்களுடன் கூடிய டோக்கன் வழங்கப்படுகிறது. பிறகு எட்டு மணியளவில் எண் வரிசையின் அடிப்படையில் வாசகர்கள் வரிசையில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நூலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரைதான் இயங்கும் என்றாலும் இந்த வசதி காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வழங்கப்படுகிறது.

“காலை ஆறு மணிக்கே இந்த அறைகளைத் திறந்தால் நன்றாக இருக்கும். அதேபோல, கூடுதலான மாணவர்கள் படிக்கும் வகையில் அறைகளை அதிகப்படுத்த வேண்டும். பல சமயங்களில் தரையில் அமர்ந்து படிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா. இவர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காகத் தயாராகி வருகிறார்.

பல மாணவர்களுக்கு இந்த நூலகம் கிட்டத்தட்ட இரண்டாவது வீட்டைப்போலவே மாறிவருகிறது. தற்போது இங்குள்ள உணவகமும் செயல்பட ஆரம்பித்திருக்கும் நிலையில், எதற்காகவும் வீடு திரும்பத் தேவையில்லாத நிலையில் மாணவர்கள் அதிகாலையில் வந்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புகிறார்கள்.

“இப்போதாவது பரவாயில்லை. போட்டித்தேர்வுகள் நெருங்குவதால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலை நான்கு மணிக்கெல்லாம் வர வேண்டியிருக்கும்” என்கிறார் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகிவரும் சுரேஷ்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை

வெளியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து படிப்பதற்கான இடத்தை அதிகப்படுத்து நூலக நிர்வாகம் தயங்குகிறது. பிரதானமாக இது நூலகமாகவே இருக்கவேண்டுமென நிர்வாகம் நினைக்கிறது.

“நூலகம் என்பது வாசகர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும். வெளியிலிருந்து புத்தகங்களை எடுத்துவந்து நாள் முழுவதும் இருந்து படிப்பதென்பது சரியாக இருக்காது. இருந்தாலும் மாணவர்கள் ஆர்வமாக இருப்பதால் கூடுதல் இடங்களை ஒதுக்க முடியுமா என்று பார்த்து வருகிறோம்” என பிபிசியிடம் தெரிவித்தார் பள்ளிக் கல்வித் துறையின் செயளாலர் உதயசந்திரன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *