எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் – பிரதமர் மோடி கணிப்பு

செயல்திறன் மிக்க அரசுக்கே மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்:

செயல்திறன் மிக்க அரசுக்கே மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்: எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் - பிரதமர் மோடி கணிப்பு
குஷிநகர்,

நாடாளுமன்றத்துக்கு 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

செயல்திறன் மிக்க, நேர்மையான அரசுக்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். எனவே, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும்.

இந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த மொத்த நாட்களை விட நான் அதிக நாட்கள் குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளேன். ஆனால், என் மீது ஊழல் கறை படிந்தது கிடையாது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக மாயாவதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?

அந்த மாநில காங்கிரஸ் அரசும், இந்த சம்பவத்தை மறைக்க நினைக்கிறது. காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பயங்கரவாதிகளை சுடுவதற்கு நமது ராணுவ வீரர்கள் தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்கினார்களா? என்று எதிர்க்கட்சிகள் கேட்டாலும் கேட்கும்.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுடலாமா? என்று அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்கள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்களா? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பின்னர், மத்தியபிரதேச மாநிலம் காண்ட்வா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

நமது மத கலாசாரத்தை இழிவுபடுத்தும்வகையில், ‘இந்து பயங்கரவாதம்’ என்ற முத்திரை குத்தி காங்கிரஸ் கட்சி சதி செய்தது. எத்தனை ‘புனித கயிறு’களை கட்டினாலும், இந்து மதத்தின் காவி வண்ணம் மீது பயங்கரவாத கறை பூசிய பாவத்தில் இருந்து காங்கிரசும், அதன் கலப்பட கூட்டணி கட்சிகளும் தப்ப முடியாது.

போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை நாட்டை விட்டு தப்ப வைத்தது, காங்கிரஸ்தான். ஏனென்றால், அவர்கள் ‘நடந்தது, நடந்து விட்டது. அதனால் என்ன?’ என்ற எண்ணம் கொண்டவர்கள். அவசர நிலை காலத்தின்போது, பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களை தடை செய்தனர். இப்போது கேட்டால், ‘நடந்தது, நடந்து விட்டது’ என்பார்கள். செய்த நல்ல பணிகளின் அடிப்படையில், நான் பிரசாரம் செய்கிறேன். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய்களை அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *