“எனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா?” – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்

“எனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா?” - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்
லக்னோ,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-ம் இறுதிக்கட்ட தேர்தல், 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வரும் 19-ந் தேதி நடக்க உள்ளது.

அவற்றில் ஒன்றான உத்தரபிரதேச மாநிலம், பால்லியாவில் பா.ஜனதா வேட்பாளர் வீரேந்தர்சிங் மாஸ்த்தை ஆதரித்து நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்.

நாட்டு மக்களை கொள்ளையடித்து பிரதமர் ஆக வேண்டும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டது இல்லை. நான் இளமைப்பருவத்தில் ஏழையாக இருந்தபோது அனுபவித்திராத எல்லா வசதிகளையும் வழங்குவதற்கு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யத்தான் விரும்புகிறேன். நான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன்.

எனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, வெளிநாடுகளில் என் பெயரில் சொத்து உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ நிரூபிக்க முடியுமா?

நான் பணக்காரன் ஆக வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டது இல்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்களாக்கள் கட்டி உள்ளனர். மற்ற சொத்துக்களை குவித்து உள்ளனர். தங்களது உறவினர்கள் சொத்துக்களை குவிக்க வைத்து உள்ளனர். என்னிடம் உள்ள ஒரே சாதி வறுமைதான். எனவேதான் நான் வறுமைக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி இருக்கிறேன்.

நான் எத்தனையோ தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன். ஆனால் என் சாதியின் ஆதரவை கேட்டுப் பெற்றதில்லை. எனது நோக்கம், இந்தியாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதுதான்.

மோடியின் சாதியைப்பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. நான் நீண்ட காலம் முதல்-மந்திரி பதவி வகித்திருக்கிறேன். நான் தேர்தல்களில் போட்டியிட்டதோடு, பலர் போட்டியிடுவதற்கு உதவியும் செய்திருக்கிறேன். ஆனால் ஆதரவுக்காக என் சாதியைப் பயன்படுத்தியது கிடையாது.

சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்த்து உள்ளன என்று சொன்றால், அது அவர்களது ஊழலை மறைப்பதற்காகவும், ஊழலில் தொடர்புடைய உறவினர்களைக் காப்பாற்றவும்தான்.

மோடியை தாக்காமல் அவர்கள் ஒரு நாளைக்கூட கழித்தது கிடையாது. அவர்கள் தாக்குதலுக்கு இந்திய மக்கள் இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள். மே 23-க்கு பின்னர் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) மீண்டும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்வர்.

நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) நான் டெல்லிக்கு போய்ச்சேர்ந்த உடன் டெலிவிஷனில் பார்த்தேன். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டார்கள். தேர்தல்கள் இன்னும் முடியக்கூட இல்லை. 23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் இது டிரைலர் (முன்னோட்டம்)தான்.

இன்றைக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுத்திருக்கிறோம். ஆனால் தேர்தலின்போது, தேசிய பாதுகாப்பு குறித்து சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பேசி பார்த்திருக்கிறீர்களா?

துல்லிய தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுத்திருக்கிறோம். வான்தாக்குதல் நடத்தி இருக்கிறோம். அதைக் கண்டு பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். மோடி தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் அவர்களது பிரார்த்தனை. இது போதாது என்று பயங்கரவாதிகளுக்கு எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். நான் என் இளமைப்பருவத்தில் சந்தித்த வறுமையை உங்கள் குழந்தைகளும் சந்திப்பதை நான் விரும்பவில்லை. நாம் மாற வேண்டும். இந்த நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக்காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *