கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கமல்ஹாசன் மீது செருப்பு-முட்டை வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார்.
அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கடந்த திங்கட்கிழமையன்று அவர் பிரசாரத்தை ரத்து செய்தார்.
இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் இரவு 9.48 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றவாறு அவர் சுமார் 7 நிமிடங்கள் பேசினார்.
பின்னர் பேச்சை முடித்துக்கொண்டு அவர் கீழே இறங்க முயன்றபோது, மேடையை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. மேலும் முட்டையும் வீசப்பட்டது. அவை மேடையில் வந்து விழுந்தன. கமல்ஹாசன் மீது படவில்லை. இதையடுத்து அவர் மேடையில் இருந்து இறங்கி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கினார்கள். இதையடுத்து அவரை போலீசார் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் மேடை மீது செருப்பு வீசியவர் பா.ஜ.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகியும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான சினேகன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மோடிக்கு எதிராக கோஷங் களை எழுப்பினர்.
இந்நிலையில் கமல்ஹாசனின்  பிரசார பொதுக் கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  “தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்கவும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *