சமூக வலைதள கணக்குகள் கண்காணிப்பு: ஆணையம் அதிரடி

சமூக வலைதள கணக்குகள், கண்காணிப்பு, ஆணையம், வேட்பாளர்கள்

சென்னை: வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்குகளும், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. இதனால், அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், பீதி அடைந்து உள்ளனர்.

லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேரடி பிரசாரம் பெரிதாக எடுபடாவிட்டாலும், சமூக வலைதள பிரசாரங்களுக்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதை உணர்ந்து, பிரதான கட்சிகள், தகவல் தொழில் நுட்ப அணியினர், சமூக வலைதள பிரசாரத்தில், சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.அதே நேரத்தில், கட்டுப்பாடு இல்லாததால், அரசியல் கட்சிகளின் அவதுாறு பிரசாரத்துக்கும், மக்களின் எண்ணங்களை திட்டமிட்டு திசை திருப்புவதற்கும், சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலக அளவில், சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற திசை திருப்பும் பிரசாரத்தைக் கட்டுப் படுத்துவது சவாலாக உள்ளது.
இதில், இந்திய தேர்தல்ஆணையம், பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தலில் சமூக வலைதள பயன்பாட்டை கண்காணிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.வேட்பு மனுவில், சொத்து விபரம், கிரிமினல் வழக்குகள் விபரம், கல்வி தகுதி ஆகியவற்றுடன், சமூக வலைதள கணக்கு விபரங்களை தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் கட்டம், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பகுதிகளில், வேட்பு மனுத்தாக்கல் முடிந்து உள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களில், பெரும்பாலான வேட்பாளர்கள், தங்களின் முகநுால், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் கணக்கு விபரங்களை அளித்துள்ளனர்.

பொதுவாக சொத்து, கிரிமினல் வழக்குகள் தொடர்பான விபரங்களை, தேர்தல் ஆணையம், நேரடியாக ஆய்வு செய்வதில்லை. ஆனால், இந்த முறை வேட்பு மனுவில் உள்ள, சமூக வலைதள கணக்கு விபரங்களை, ஆராய துவங்கியுள்ளது.வேட்பு மனுவில் இடம் பெற்றுள்ள சமூக வலைதள விபரங்கள், தேர்தல் பார்வையாளர்களுக்கும், ஊடக கண்காணிப்பு பிரிவுக்கும், தொகுத்து அனுப்பப்படுகின்றன. அவர்கள், இந்த கணக்குகளை தொடர்ந்து, கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், வேட்பாளர்கள் சார்பில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள், அவர்கள் தொடர்பில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் பிரசாரம் போன்றவையும், கண்காணிப்பில் வரும். வேட்பாளரின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்கள் யாராவது, அடுத்த கட்சியினர் குறித்த அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனரா என்பது போன்ற, கோணங்களிலும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக, அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் செயல்பாடுகளும், ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன. இது, அவதுாறு பரப்பி, தேர்தலில் லாபம் அடைய நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *