சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் ரத்து

HighCourtch

சென்னை- சேலம் இடையிலான பசுமை (எட்டு) வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்தும், நிலங்களில் இருந்து நிலத்தின் உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது, நிலம் கையகப்படுத்துதல் விதிகளின்படி நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது.
மேலும் சென்னை- சேலம் இடையே ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் இருக்கும்போது, இந்த 8 வழிச்சாலை தேவையா என்ற கேள்வி எழுகிறது. முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் சென்னை- மதுரை திட்டம்தான் இருந்தது. அந்த திட்டத்தை சென்னை – சேலம் பசுமைவழிச்சாலைத் திட்டமாக மாற்றியுள்ளனர். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் முன் மத்திய அரசு சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் குறித்து கூர்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்துக்கான அறிக்கை வெறும் 60 நாள்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இரண்டு நெடுஞ்சாலைகளை இணைக்க 1944-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை திட்டம் குறித்து ஆய்வு செய்து அதன்பின்னர் அந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இந்த திட்டத்தால் அடர்ந்த வனப்பகுதி, நீர்நிலைகள், வனவிலங்குகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்படும். திட்டத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தத் திட்டத்தை அனுமதித்தால் வனப்பகுதி மட்டுமின்றி வனத்தில் வாழும் அரிய பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு அழிவு ஏற்படும். இந்த சாலை அமைந்தால் அது மரக்கடத்தலுக்கு வழிவகுத்து விடும்.
வனப் பகுதியின் வழியே செல்லும் இந்தச் சாலைகளின் இருபுறங்களிலும் சுற்றுச்சுவர் அமைத்தோ, துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்தியோ வனத்தைப் பாதுகாக்க முடியாது. மேலும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் அரிய வகை கனிமங்கள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகளால் ஏற்கெனவே தமிழகத்தில் கொடைக்கானல், உதகை உள்ளிட்ட மலைப் பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறாமல் தொடங்கி உள்ளனர். மேலும், திட்டத்தை தொடங்குவதற்கு முன் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இது குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டியது போன்றதாகும். இந்தத் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கை, திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வுக்கு உள்படுத்தவில்லை. இவ்வாறு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் திட்ட அறிக்கை தயாரித்து திட்டத்தின் அறிவிப்பாணை வெளியிட்டதே சட்டவிரோதம். பொதுமக்கள் பலர் விவசாயத்தையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை சட்ட ரீதியாக பாதுகாப்பது அவசியமாகும்.
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், மரங்களையும் வெட்டி சாலைகள் அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டவிரோதமாக நடந்துள்ளது.
நிலத்தின் உரிமையாளர்களுக்கான மறுவாழ்வு, மறுகுடியமர்வு குறித்து எந்த தெளிவான பதிலும் அளிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து நடந்த பொதுமக்களின் அமைதியான போராட்டங்களை அரசு எழுதப்படாத தடை உத்தரவு மூலம் ஒடுக்கியுள்ளது. எனவே அவசரகதியில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்ட இந்த திட்டத்துக்கான அனைத்து அறிவிப்பாணைகளும் ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
8 வார காலத்துக்குள்: இந்த வழக்கு விசாரணையின்போது பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் அரசு நிலங்கள் என வருவாய் துறை ஆவணங்களில் மாற்றி விட்டதாகவும், நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிடுவதற்கு முன்பே இந்த பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு விட்டதாகவும் மனுதாரர்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், அரசு நிலங்கள் என வருவாய்த் துறை ஆவணங்களில் மாற்றப்பட்ட நிலங்கள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் 8 வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். இதற்கான திருத்தங்களை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *