ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்


ஜாலியன் வாலாபாக் படுகொலை; 100 ஆண்டுகளுக்கு பின் வருத்தம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு 100 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வருத்தம் தெரிவித்து கொண்டார்.
லண்டன்,
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நாடு முழுவதும் வெள்ளையர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.  கடந்த 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ந்தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் நகரில் இந்தியர்கள் பலர் ஒன்றாக கூடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அங்கு வந்த இங்கிலாந்து நாட்டு ஜெனரலான ரெஜினால்டு டயர் தனது குழுவினரை அவர்களை நோக்கி சுடும்படி உத்தரவிட்டான்.  அங்கு கூடியிருந்தவர்கள் தப்பி செல்ல இருந்த குறுகலான ஒரே வழியும் அடைக்கப்பட்டு விட்டது.  இதனால் கூட்டத்தினர் வேறு எங்கும் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  1,100க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர்.  சிலர் தங்களை காத்து கொள்ள அங்கிருந்த கிணறு ஒன்றில் குதித்தனர்.  இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகின்றன.  இதற்காக இங்கிலாந்து அரசு இதுவரை மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெரேமி கார்பின், இந்த விவகாரத்தில் முழுவதும், தெளிவான, வெளிப்படையான மன்னிப்பு கோர வேண்டும் என கூறினார்.
இதனை அடுத்து பேசிய அந்நாட்டு பிரதமர் தெரசா மே தனது வருத்தத்தினை இன்று தெரிவித்து கொண்டார்.  அவர் கூறும்பொழுது, இந்தியாவுடனான எங்களது கடந்த கால வரலாறு வருத்தத்திற்குரிய ஒன்றாக அமைந்து விட்டது.  நடந்த சம்பவத்திற்கும் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்தினை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.
எனினும், இந்த பேச்சில் அவர் மன்னிப்பு என்ற வார்த்தையை எங்கும் பயன்படுத்தவில்லை.  வருத்தம் தெரிவிப்பதற்கு இங்கிலாந்து நாடு 100 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.  இந்த படுகொலைக்கு பின் குண்டுகள் பதிந்த தடங்கள் இன்னும் அந்த சுவரில் இருந்து மறையாமல் உள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *