தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து, பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல காற்றின் வேகமும் 45 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் சில சமயங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி கோத்தகிரியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கூடலூரில் 4 செ.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 3 செ.மீ. ஊட்டி, சேரன்மகாதேவி, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., தளி, தேவலா, நடுவட்டம், சூளகிரியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *