தமிழகத்தில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக 7,280 நுண் பார்வையாளர்கள் நியமனம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


தமிழகத்தில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக 7,280 நுண் பார்வையாளர்கள் நியமனம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக 7,280 மத்திய அரசு ஊழியர்களை நுண் பார்வையாளர்களாக நியமித்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
வேலூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி போலீஸ் நிலையத்தில் வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட்டின் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலும் ரூ.15 கோடி அளவுக்கு வருமான வரித்துறையினர் பணத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு இன்னும் செய்யப்படவில்லை. அதுபற்றி பரிசீலிக்கப்படும்.
சிக்கிய பணம்
தேர்தல் நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை ரூ.124.63 கோடி அளவுக்கு பணம் பிடிக்கப்பட்டுள்ளது. 9-ந் தேதி மட்டும் ரூ.2.33 கோடி பணம் சிக்கியது. இதில் கடலூரில் ரூ.1.27 கோடி, காஞ்சீபுரத்தில் ரூ.24 லட்சம் ஆகியவை அடங்கும்.
அதுபோல இதுவரை 989.6 கிலோ தங்கம், 492.3 கிலோ வெள்ளி உள்பட ரூ.283 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தமிழகம் முழுவதும் 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுண் பார்வையாளர்கள்
தமிழகத்தில் பதற்றமுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக 7,280 நுண் பார்வையாளர்கள் (மத்திய அரசு ஊழியர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுப் பார்வையாளர்களிடம் பயிற்சி பெறுவார்கள். அவர்கள் பார்வையிடும் சம்பவங்கள் பற்றி பொதுப் பார்வையாளர்களிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இடைத்தேர்தல்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகள் இடைத் தேர்தல், 31.1.2019 வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து நடத்தப்படும். அந்த 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுவதால், மற்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 18-ந் தேதியன்று முடிவடைந்தாலும், அதன் பிறகும் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நீடிக்கும்.
வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் (மே 23-ந் தேதி) சில பகுதிகளில் மறுதேர்தல் நடத்தும் சூழ்நிலை எழக்கூடும், எனவே இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி மே 27-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
விதிகள் தளர்வு
வாக்குப்பதிவு முடிந்த பிறகு சில அம்சங்களில் மட்டும் விதிகளை தேர்தல் ஆணையம் சற்று தளர்த்தும். முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், இந்த 4 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பை தனியாக வெளியிட முடியாது.
பல்வேறு காரணங்களுக்காக தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக சில இடங்களில் மக்கள் அறிவித்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *