தேர்தல் விதிமீறி 300 பஸ்கள் இயக்கம்

 பயணியரின் ஓட்டுகளை அள்ள தேர்தல் விதிமீறி 300  பஸ்கள் இயக்கம்

சேலம்:கொங்கு மண்டல பயணி யரின் ஓட்டுகளை, ஆளும் கட்சிக்கு அள்ளும் வகையில், கோவை, சேலம், கும்பகோணம் கோட்டங்களின் சார்பில், பாடாவதி பஸ்கள் ஓரம் கட்டப்பட்டு, 300 புதிய பஸ்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி இயக்கத்துக்கு வந்துஉள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 6,000 புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் வரை, 1,500 புதிய பஸ்கள் இயக்கத்துக்கு வந்தன. கடந்த மார்ச், 10ல் தேர்தல் தேதி வெளியான நிலையில், நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது.இது புதிய பஸ்களின் இயக்கத்துக்கும் பொருந்தும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு, 300 புதிய பஸ்கள் தயாராக சென்னை, கரூரில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வுக்கு தென் மாவட்டங்கள் கை கொடுக்காது என, உளவு அமைப்புகள் அரசுக்கு அறிக்கை அளித்தன.இந்நிலையில், அ.தி.மு.க., வின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், வெற்றியை உறுதி செய்யும் வகை யில், பல்வேறு திட்டங்கள் சப்தம் இன்றி அரங்கேற்றப் பட்டு வருகின்றன.
அந்த வகையில்,சேலம் கோட்டத்தில்,பழைய பாடாவதி பஸ்களுக்கு பதில், 100 புதிய பஸ்களும், கோவை, 100, கும்பகோணம் கோட்டத்தில், 100 என, மொத்தம், 300 புதிய பஸ்கள் எந்தவித விழாக்களும் இன்றி இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த மாவட்டங்களில், ஏற்கனவே இயக்கத்தில் உள்ள அனைத்து பாடாவதி பஸ்களும் ஓரங்கட்டப்பட்டு வருகின்றன.
சேலம் கோட்டத்தில், இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு, அதிகளவில் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் அனைத்தும், தேர்தல் விதிகளை மீறி இயக்கத்துக்கு வந்துள்ள நிலையில், தி.மு.க., கூட்டணி கட்சி களும் கண்டு கொள்ளாததால், தேர்தல் அதிகாரி களும் ஆழ்ந்த சயனத்தில் உறைந்துள்ளதாக, தி.மு.க., ஆதரவு தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *