சிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா?

Advertisements

 

பருவ மழை பொய்த்ததாலும், மிகக் கடுமையான வறட்சி காரணமாகவும், சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், சிக்கராயபுரம் கல் குவாரிகளில் தேங்கி நிற்கும் நீரை பயன்படுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டனர். இதற்காக, திருநீர்மலை, பம்மல், சிக்கராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல் குவாரி நீர், ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதில், குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரம் ஊராட்சியில், கல் குவாரிகளின் நீரை குடிநீராக பயன்படுத்தலாம் என, பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி நீரை, 3 கி.மீ.,க்கு ராட்சத குழாய்கள் பதித்து, செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்து, சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.

 

 சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் வாரியம் மூலம், தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ள கல்குவாரி.

 

குன்றத்துார் அருகே கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், மலையம்பாக்கம் ஆகிய ஊராட்சி எல்லையில் பரந்து விரிந்து அமைந்துள்ளது இந்த கல் குவாரி. சிறு சிறுதீவுகள் போன்று காணப்படும் இவற்றை முறையாக வெட்டி, இணைத்து, பெரிய நீர்த்தேக்கமாக மாற்றலாம். இதுவரை எந்த கோடையிலும் இந்த கல்குவாரியில் நீர் வற்றியதே இல்லை. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே இந்த கல்குவாரி உள்ளதால், அதிகளவு சிரமமும் ஏற்படாது. மழைக்காலத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரி நீரை இந்த கல்குவாரியில் சேகரிக்கும் வகையில் இணைப்பை ஏற்படுத்தினால், எதிர்காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். கோடையிலும், தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் திருட்டு

இந்த கல் குவாரியில் தேங்கியுள்ள நீரை, பல ஆண்டுகளாக, சிலர் மோட்டார் மூலம் தனியார் டேங்கர் லாரியில் உறிஞ்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதி ஓட்டல்கள், குடியிருப்புகளுக்கு விற்று லாபம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து தெரிந்தும், வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

காணாமல் போன உச்சி மலை

குன்றத்துார் அருகே கொல்லச்சேரி, சிவன்தாங்கல், சிக்கராயபுரம் ஆகிய கிராம பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கல்குவாரி, ஒரு காலத்தில் மலையாக இருந்துள்ளது.உச்சிமலை என, அழைக்கப்பட்ட இந்த மலை, 1980க்கு பின் அழிக்கப்பட்டு, கல்குவாரியாக மாற்றப்பட்டது. 150 அடி உயரத்தில் இருந்த உச்சிமலை, தற்போது, 300 அடி ஆழம் கொண்ட கல்குவாரியாக மாறிவிட்டது.

You may also like...

Leave a Reply