ரஜினிகாந்தும் தமிழக அரசியலும் —— நா.இராதாகிருஷ்ணன்

Advertisements

புலி வருது புலி வருது என்று பயம் காட்ட ஆரம்பித்துள்ளார் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,. வந்துவிட்டரா என்றால் அது கடவுளேக்கே தெரியும் என்கிறார்.
மீண்டும் தமிழக அரசியல் களம் ரஜினிகாந்த் சுற்றியும், தமிழக மீடியாக்கள் வருவாரா? மாட்டாரா? வரும் ஆனா வராது என்ற வடிவேலு காமெடிகளும் அரங்கேறி வருகின்றன.

பிம்ப அரசியலுக்கு பழகிப்போன தமிழக அரசியல், கொள்கை சார்ந்த அரசியல் விழிப்புணர்வு இன்றை இளைய தலைமுறை பிள்ளைகள் பெற்று வரும் வேளையில்., மீண்டும் ஒரு மயக்க மருந்து நடிகர் ரூபத்தில்.

ஜல்லிகட்டிலும், நெடுவாசல் மற்றும் விவசாயிகளின் அறப்போராட்டத்திலும் மதுவுக்கு எதிரான போராட்டத்திலும் தன்னிச்சையாக அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இளைஞர்கள் களம் புகுந்து வெற்றிகளை கண்டு வரும் வேளையில், அது இளைஞர்கள் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உருப்பெற்று வருவதை காட்டுகிறது.
அரசியல் விழிப்புணர் இளைஞர்கள் மத்தியில் விரைவாக பரவி வருவதற்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை அதரவு நிலையும், எதிர்ப்பு நிலையுமாக, தமிழகம் அக்னி நட்சத்திர சூட்டின் வெப்பத்தால் தகித்து வரும் வேளையில், அரசியல் வெப்பமும் அதிகரித்து வருகிறது.

அரசியலில் யாரும் வரலாம். தடையில்லை. ஆனால் வருபவர்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது. எதற்காக வருகிறார்கள். என்ன செய்ய வருகிறார்கள் என்ற தெளிவு இருக்க வேண்டும். அது மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அவர்களை மக்கள் ஆதரிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.

ரஜினியின் நிலையில் மேற்சொன்ன விஷயகங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அரசியல் இரண்டரை மணி நேர சினிமாவைப் போல் நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. ரஜினியின் முன் தயாரிப்பு என்ன, மக்கள் பிரச்சனைகளில் அவர் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. பிறகு எதற்கு அவர் அரசியலுக்கு வர வேண்டும். அதன் பின்னணி என்ன?

பி.ஜே,பி.யுடன் நெருக்கத்தில் இருந்த ரஜினியை சமீபத்தில் காங்கிரசின் நக்மா நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். பல்வேறு கட்சிகளும் ரஜினியின் ஆதரவை கேட்டு நின்ற கதையும் தெரிந்ததே. இப்போது ரஜினி பி.ஜே.பி. கூட்டோடு வரப்போகிறாரா இல்லை கராத்தே தியாகராஜன் சொல்லுவது போல் பா.சிதம்பரம் தலைமையில் அமையப் போகும் காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி காணப் போகிறாரா? இல்லை தனித்து களம் காணப்போகிறாரா இல்லை வரப்போகிற தனது புதுப்படத்திற்கு விளம்பரம் தேடப் பார்கிறாரா என்பது விரைவில் தெரியப் போகிறது.
எது எப்படியோ மீண்டும் ஒரு மாய அரசியல், பிம்ப அரசியலில் மக்கள் மாட்டிக் கொள்ளாது, கொள்கை சார்ந்த உண்மை தலைவர்களை தேர்தெடுப்பதே தமிழகத்திற்கு நல்லது. ரஜினி வருவது, வராமல் போவது கடவுளுக்குத்தான் தெரியும் என்று அவரே சொல்கிறார். அவர் வருவதற்குள் ஏன் இந்த குழப்பம்?.

You may also like...

Leave a Reply