உயிரே கடவுள்

Advertisements

மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம்  சிவம்! இல்லையேல் நாம் சவம்!

உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே !

ஒருவன் எப்படி பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்? ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?
இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே..

பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?

அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.

உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!

தாயின் கருவிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு கருவுக்கு உயிர் எப்படி வந்தது?

“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!!
அவனே சித்தன்!!

இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் வந்து சேர்க்கிறது!

அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!

இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்!

“ உயிரே கடவுள், அகம் பிரம்மாஸ்மி”.

உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!

கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”

திருமந்திரம் கூறும் சத்தியம் இதுவே! தமிழ் மறையான இதுவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை ஞானம்! இறை இரகசியம்!

நம் உடலாகிய கோயிலில் உயிராக தானே வீற்றிருக்கிறான் எல்லாம் வல்ல இறைவன்!

இன்றுவரை இந்த உலகில் தோன்றிய மதங்களும், மார்க்கங்களும், மகான்கள் அனைவரும் சொன்னதும் ஒப்புக்கொண்டதும் இந்த உண்மை ஒன்றையே! இறைவன் ஒருவரே நம் உடலில் உயிராக இருப்பதும் அவரே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது! இதை மறுப்பவர் யாருமில்லை! எம்மதமும் இந்த உண்மைகளை மறுத்ததில்லை! உலகர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே உண்மை இது ஒன்றே!!

எல்லாம் வல்ல இறைவன் நம் உடலில் உயிராக இருக்கின்றான் என்பதும் தான் மனிதனாக பிறந்த நாம் அரிய வேண்டிய மாபெரும் இரகசியம்!

You may also like...

Leave a Reply