[:en]குண்டாஸ் – அத்துமீறுகிறதா அரசு? – ஆர்.கே.[:]

[:en]

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை கேட்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. ஆம். சமூக போரட்டங்களில் தங்கள் பங்கேடுப்பை  தீவிரப்படுத்துபவர்கள் மீது பாய்கிறது குண்டாஸ் சட்டம்.

முன்னேச்சரிக்கையாக பொது அமைதிக்கு தொடர்ந்து பங்கம் விளைவிப்பவர்கள் மீது போடப்படும் தடுப்புக்காவல் சட்டம் தான் இந்த குண்டாஸ். இதற்கு பிணை வழங்க சட்டத்தில் இடம் இல்லை.  இச்சட்டம் பொதுவாக சமூகத்தில் தொடர்நிலையாக சட்ட, ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், கொள்ளைக்காரர்கள்,  கள்ளச்சாரம் மற்றும் போதைப்  பொருட்களை கடத்தி விற்பவர்கள் என்று சமூக விரோத செயல்களை செய்பவர்களை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் பல சமூக விரோதிகள் ஜெயிலில் உள்ளார்கள். இச்சட்டம் அடுத்த நிலையாக அரசு தங்கள் அரசியல் களத்தில் வேண்டப்படாதவர்கள் மீதும் போடப்பட்ட வரலாறுகள் உண்டு. பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், பெரும்பாலான வழக்குகளில் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி நீதிமன்றங்கள் விடுதலை செய்துள்ளது. இது கடைசியாக பொதுமக்களையும், அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்தலுக்கு பயன்படுத்தும் சட்டமாக மாறி நிற்கிறது.  காரணம் இச்சட்டம் அரசுகளால் தவறாக பயன்படுத்துவதே ஆகும்.

சமீபத்திய உதாரணம்  மே 17 இயக்கத்தின்  அமைப்பாளர் திருமுருகன் காந்தி, அவர் சார்ந்த மூவர் மீது இச்சட்டம் பாய்ந்து சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சமூக போரட்டகளத்தில் பணி செய்த வளர்மதி, மற்றும் திவ்யா மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் அதிமுக அரசுக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, அரசியல் கட்சிகள் தாண்டி சமூக செயற்பாட்டளார்கள் மீது இச்சட்டம் பாய்வது கண்டிக்கத்தக்கதாக உள்ளது. போராடினால் குண்டர் சட்டம் என்றால், அரசு வாய்பூட்டு சட்டமாக இதை மாற்றுகிறதா? கருத்து சுதந்திரத்தையும், போராடும் உரிமையையும் மறுக்கிறதா என்கிற கேள்வி வருகிறது.

மத்திய ஆளும் பாஜக அரசின் பினாமி அரசு என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கப்படும் அதிமுக அரசு எஞ்சியிருக்கும் காலத்தை கடத்தி போக வேண்டிய நிர்பந்தத்தில் மத்திய அரசின் சைகைக்கு கட்டுப்பட்டு இத்தகைய நடவடிக்கைகள் பாய்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. காரணம்  கூடம்குளம், ஜல்லிக்கட்டு, மீன்தேன் எரிகாற்று, நீட் என்று மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்கள் அணி  திரள்வதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கின்றது. இது மக்கள் போராட்டமல்ல அரசியல் சூழ்ச்சி என்று மத்திய அரசு நம்புகிறது.

காரணம் சமீபத்திய நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் ஜல்லிகட்டின் நீட்சியாக நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர்கள் காரணத்தால் அப்போராட்டங்கள் தீவிரமடைவதாகவும் உளவு அறிக்கைகள் மத்திய அரசுக்கு சென்றுள்ளன. அதை கட்டுப்படுத்த இச்சட்டங்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அதை தவிர்த்து போராட்ட களத்தை நசுக்க நினைப்பது, தற்காலிக தீர்வாக இருக்கலாமே தவிர  அது பிரச்னையை தீர்த்ததாக ஆகிவிடாது. மேலும் எலியை அழிக்க ஊரை கொளுத்திய கதையாக மாறக் கூடும். காரணம் போரட்ட களத்தில் பங்கேற்பவர்கள் இளைஞர்கள். 65 சதவீத வாக்காளர்களாக இருப்பவர்கள் இளைஞர்களே, அவர்களின் மன உணர்சிகளுக்கு எதிராக அரசு செயல்படுவது எதிர்வினையை ஏற்படுத்தும். யோசித்து செயல்படுவது அரசுக்கு நல்லது.

 

 

 

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *