[:en] அ.தி.மு.க. ஆட்சி ஆகஸ்ட் 5 முடிவா? எபிசோடா? ….  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

திமுக பிரிவினையில் உருவான கட்சி அதிமுக. அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர் தனது சினிமா கவர்ச்சி மூலம் அதற்கு தமிழகத்தில் ஒரு தனி இடம் ஏற்படுத்திதந்து,  அதை தான் இருக்கும் வரை ஆளும் கட்சியாக வைத்திருந்தார். அவருடைய தொடர்சியாக செல்வி.ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளராகி அக்கட்சியை கட்டுக்கோப்பான அச்சத்தில் அனைவரையும் வைத்திருந்தார். அக்கட்சி ஒழிந்தது என்று  பலரும் நினைத்திருந்த வேளையில் அதற்கு புத்துயிர் கொடுத்து  ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர்.

எது எப்படியோ? ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சி திக்கில்லா காட்டில் அலையும் சிறுபிள்ளை போல் எங்கு போனால் பாதுகாப்பு என்று அலைந்து திரியும் நிலையில் உள்ளது.  தன்னையே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத நிலையில் இருக்கும் அதிமுக. தமிழகத்தை ஆளும் பொறுப்பில் இருப்பது, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுக்கும் இடத்தில் இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  அது உண்மையும் கூட.  ஜல்லிகட்டு தொடங்கி, மீனவர் பிரச்னை, நெடுவாசல், கூடங்குளம், கதிராமங்கலம்,  நீட்  என்று  மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தோல்வி அடைந்து வருவதை மக்கள் பார்த்து வருகின்றனர்.

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசை நேடியாக குற்றம் சாட்டும் தைரியம் கூட அவர்களுக்கு இல்லை. எப்படியோ மத்திய அரசின் தயவில் நான்கு ஆண்டு கால ஆட்சியை கடத்தி விட வேண்டும் என்பதை  அவர்கள் எண்ணமாக இருக்கிறது. எந்த ஒரு அழுத்ததையும் மத்திய அரசுக்கு அவர்கள் தர தயாராக இல்லை. முடியவில்லை. ஏன் என்றால் ஆட்சியில் செய்த முறைகேடுகள் வழக்காக பாயும் விசாரணையாக வந்து சேரும் என்ற பயம் வேறு. இதை அவர்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரனே சொல்கிறார். அமைச்சர்களுக்கு என்ன பயமோ தெரியவில்லை. போதிய  அழுத்தத்தை தரவில்லை என்கிறார்.

கட்சியோ மூன்று பிரிவாக பிரிந்து நிற்கிறது. பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் அணி என்று அவர்களுக்குள் பவர் பாலிட்டிக்ஸ் நடக்கிறது. கட்சியின் அணிகள் இணைப்புக்கு தினகரன் 60 நாட்கள் கொடுத்த கெடு முடிவடையும் நாள் ஆகஸ்ட் 4.  ஐந்தாம் தேதி முதல் கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சிப்  பணியை தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.

கட்சியும், ஆட்சியும் எங்கள் பொறுப்பில் உள்ளது. யாரையும் உள்ளை நுழைய விட மாட்டோம். ஒதுங்கியவர்கள் ஒதுங்கியபடியே இருக்க வேண்டும். மீறினால் அதை சாமாளிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு என்று கூறுகிறது எடப்பாடி அணி. அதிமுக பவர் பாலிட்டிக்ஸ் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 127 எம்எல்ஏக்கள் தங்களிடமே உள்ளனர் என்கிறார் எடப்பாடி. 27 எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர். 100 எங்கள் பின்னால் வருவார்கள் என்கிறார் தினகரன். அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. எடப்பாடி அரசு நடப்பதே தவறான வழி முறையில் என்கிறார் பன்னீர் செல்வம். ஆகஸ்ட் 5  தேதி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்க இந்தியாவே காத்திருக்கிறது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆட்சியை கவிழ்ப்பார்களா? இல்லை கட்சி அலுவலகத்தை கைப்பற்றி கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.  கட்சியையோ அல்லது ஆட்சியையோ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் தினகரன்  உள்ளார்.  அதற்காக அவர்  எந்த எல்லை  வேண்டுமானாலும் அவர் செல்லலாம்.  எடப்பாடி ஆட்சி அம்மா வழியில் ஆட்சி செய்யவில்லை என்று கூறி தனது ஆதரவு எம்எல்ஏக்களை அவர் பதவி விலக சொல்லலாம். இல்லையேல் ஐந்தாம் தேதி நடக்கும் குழப்பத்தில் புதிய அணி  மாறுதல்கள் நடக்கலாம்.   ஆக கூடி உச்சக்கட்ட குழப்பத்தில் தமிழகம் உள்ளது.  குழம்பிய குட்டையான தமிழக அரசியலில் பாஜக அழகாக மீன் பிடிக்கும் என்பதில் ஐயம்  இல்லை.[:]

You may also like...

Leave a Reply