[:en]தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி மணல் குவாரிக்கு தடை நீடிப்பு[:]

Advertisements

[:en]


தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மணல் குவாரிக்கு தடை நீடிப்பு
மதுரை,
மணல் இறக்குமதி தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
விளம்பரம்

அதை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், 6 மாதத்தில் மணல் குவாரிகளை மூடவேண்டும் என்று, கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-
* சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில், இன்று முதல் (அதாவது நவம்பர் 29-ந் தேதி முதல்) 6 மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்கக்கூடாது.
* வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் மாநில அரசே மணலை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் இறக்குமதியை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநில அரசு தேவைப்படும்பட்சத்தில் சட்டம் இயற்றலாம்.
இவ்வாறு நீதிபதி ஆர்.மகாதேவன் தனது உத்தரவில் கூறி இருந்தார்.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின்சார்பில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதாடுகையில், “தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதங்களாக சட்டவிரோத மணல் கடத்தல் பெருமளவில் குறைந்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலாக இருந்தாலும் மாநில விதிகளுக்கு உட்பட வேண்டும். மக்களின் நலன்கருதி புதிய மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தனிநீதிபதியின் உத்தரவு தடையாக உள்ளது. எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் நேற்று வழங்கினர். அதில் கூறி இருப்பதாவது:-
கனிமவளம் சுரண்டப்படுவதை தடுக்க மாநில அரசு தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கோர்ட்டுகள் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு தனி நீதிபதியின் தீர்ப்பு ஒரு சான்று. கனிமவளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை போவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக மணல் அள்ளப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பொதுமக்களின் நலன் பாதிக்கப்படும் வகையிலும், அடிப்படை உரிமைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீறப்படும் வகையிலும் கொள்கை முடிவுகள் அமைந்தால், அதில் கோர்ட்டு தலையிட முடியும்.
‘தீவிரமாக அமல்படுத்துக’
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படாவிட்டால் மனித வாழ்வுக்கும், எதிர்கால சந்ததியினர் நலனுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் தவறும் நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசியல் அமைப்பு உரிமைகள், அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாக திகழும் நீதிமன்றங்களின் கடமை.
எனவே தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
மணல் குவாரிகளுக்கு தடை நீடிப்பு
இதனால் தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு விதிக் கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. 6 மாதங்களுக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கடந்த நவம்பர் 29-ந் தேதி உத்தரவிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யுமாறும் அறிவுறுத்தினார். மாவட்ட கலெக்டர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் தனி நீதிபதியின் உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

[:]

You may also like...

Leave a Reply