​*காமன் எரிந்த மாசிமகம்*

Advertisements

*”காமூட்டி”*, *”காமாண்டி”* என்ற பெயரில் தமிழகம் எங்கும் ஒரு பழமையான திருவிழா இன்று (01/03/18) கொண்டாடப்படுகிறது, *”அட்டுதல்” என்றால் எரித்தல், நெருப்புடன் தொடர்பாதல், அழிந்து போதல்”* என்றெல்லாம் பொருள் வரும்
*சிவபரம்பொருளால் அட்டப்பட்ட எட்டுபேரில் “காமனும் ஒருவன்”*, காமனை இறைவன் கனலாக விழித்து பொசுக்கிய நாளையே *காமூட்டி (காம அட்டி)* என்று தமிழக கிராமங்களில் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள்
இது நடந்த நாள் *”மாசிமாத மகநட்சத்திர நிரம்பிய “மாசிமகம்” நாளாகும்*
தமிழர்களுக்கும் சிவபரம்பொருளுக்கும் உள்ள தொடர்பு மிகப்பழமையானது என்பதை புரிந்து கொள்ள ஆதாரமான இந்த திருவிழாவை சைவப்பெருமக்களே கண்டு கொள்வதில்லை என்பது ஆச்சர்யமான உண்மை
சங்கப் பாடல்களில் “காமவேள் விழா” என்றும் “உள்ளிவிழா” என்றும் இத்திருவிழா வழங்கப்படுகிறது *உள்ளி என்ற சொல்லே ஹோலி என்று திரிந்து ஹோலி பண்டிகையாக இன்று வடக்கே இந்த காமவேள் விழா சிறப்பாக கொண்டாடப் படுவதை உய்த்துணரலாம்*
*எங்கும் நிறைந்த சிவபரம்பொருள் தன் இயக்கமாகிய திருவருளாம் உமையவளை தன்னுள்ளே ஒடுக்கி கொண்டு யோகத்தில் அமர்ந்துவிடுகிறார், பலகாலம் சுவாமி யோகத்தில் இருப்பதால் உலகில் உயிர்கள் சம்போகம் செய்யாமல் இருக்கின்றன, தவிர சூரபன்மாவை வதைக்க சிவமைந்தன் ஒருவன் பிறக்க வேண்டிய அவசியமும் தேவர்களுக்கு ஏற்படுகிறது* 
இறைவன் யோகத்தில் இருந்தால் உலகில் சம்போகம் உண்டாகாது என்பதனை *”பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ”* என்ற மணிவாசகத்தால் அறியலாம்
இப்படியான பெருமானது யோகத்தை தங்களது சுயத்தேவைக்காக இறைசங்கல்பத்துக்கு மாறாக கலைத்து விட தேவர்கள் மனம் கொண்டவர்களாய் *பெருமானது மேல் காமபாணத்தை ஏவ முடிவெடுக்கிறார்கள்*
*”காமன்” என்பவன் காதல் கடவுள் இவன் தென்றல் தேரை வசந்தன் செலுத்த கிளியிழுக்க இரதி தேவியுடன் வருபவன் கையில் உள்ள மனோரூபமான கரும்பு வில்லால் ஐந்து மலர்களால் உயிர்களை தாக்கி அவைகளை சம்போகத்தில் ஈடுபட வைப்பவன்*
பசுக்களை ஏவும் வல்லவனைப் போய் *பசுக்களுக்கு பதியான பசுபதியெம்பெருமான் மீது மலர்வாளி தொடுக்க வேண்டினர் தேவர்கள், “இறைவன் என்னை எரித்து விடுவார்” என்று அஞ்சிய மதனனை, தேவர்கள் வலுக்கட்டாயம் செய்வர், அதனால் உயிர்தியாகம் செய்ய துணிந்தவனாய் கயிலைக்கு செல்வான் காமன், இரதி தேவி பலவாறும் காமனை தடுத்து அழுவாள் “ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகாதீர்” என்பாள், ஆயினும் காமன், சுவாமி மீது அம்பு எய்துவான், இறைவன் மூன்று கண்களையும் விழிப்பார் அதன் வெம்மையில் உண்டான தீப்பொறிக்கு இரையாகிய காமன் பொசுங்கி சாம்பலாய் விழுந்து விடுவான்* பிறகு இரதிதேவி இறைவனிடம் பலவாறும் முறையிட்டு அழுவாள் *மனமிறங்கிய கருணாமூர்த்தீயாம் சிவபெருமான் காமனை  உருவம் இல்லாதவனாய் இரதிக்கு மட்டும் தெரிபவனாய் உயிர்ப்பிப்பார்*
இச்செய்தியை *”பாங்குடை மதனனை பொடியா விழித்து, அவன் தேவி வேண்ட முன்கொடுத்த விமலனார்”* என்று திருஞான சம்பந்தப் பெருமான் திரிகோணமலை பதிகத்தில் எடுத்தாள்வார், மேலும் எண்ணற்ற திருமுறை பாடல்களில் காமன் எரிந்த செய்தி காட்டப்பெறுவதை அறியலாம்
மயிலாடுதுறை அருகே *திருக்குறுக்கை வீரட்டம் காமனை எரித்த தலமாக அமைந்துள்ளது, இங்கு காமன் எரிந்து விழுந்த இடம் சாம்பல் குண்டமாய் வெள்ளையாய் காட்சி தருவது கண்டுணரத்தக்கது*
இதெல்லாம் ஆரிய புராணச்செய்தியின் அடிப்படை என்று சொல்பவர்கள், எண்ணி பாருங்கள் *இன்று காமூட்டி திருவிழா நடைபெறாத தமிழக கிராமங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்*
இந்த காமூட்டி திருவிழா வைதீக ஆகம வழிபாடுகளில் இருந்து சற்று தள்ளியிருக்கும் நாட்டுப்புற மக்களால் கொண்டாடப்படுகிறது இது சங்க காலம் தொட்ட பழமையான விழா என்பதை முன்னரே குறித்தோம்
*”காமனை சிவன் எரித்த விழா”*  இது. எனில் சிவபரம்பொருள் எத்தனை பழமையாக தமிழர்களின் கலாச்சாரத்துடன் கலந்துள்ளார் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும்
*இறைவன் யாரை மறக்கருணை செய்து ஆட்கொண்டாலும் மறைந்தவர் பெயரை தனக்கு உரியதாக கொள்வார்* இதனாலயே *இறைவனுக்கு “மன்மதநாத சுவாமி”, “மன்மதேஸ்வரர்”, “மன்மத சுவாமி” என்ற பெயர் உண்டாகியுள்ளது*
தமிழக கிராமங்களில் சாலை சந்திப்புகளில்  சின்ன மேடையில் சிறிய சிவலிங்கமாகவோ அல்லது வெகு சிறிய ஆலயத்தில் சிறிய லிங்க வடிவினராகவோ சுவாமி வீற்றிருப்பார் கேட்டால், *மன்மதன் கோயில், மம்முதங் கோயில், மன்மத சாமி கோயில், காமூட்டி கோயில்* என்பார்கள்
மாசிமாதம் அமாவாசை கழிந்த நாளில் இருந்து *”காமன் விழா” துவங்குகிறது, மன்மத சுவாமி ஆலய வாசலில் ஒரு சிறிய பந்தல் போட்டு அதில் ஒரு குச்சியின் நுனியில் வறட்டியை கட்டி மனித உருவம் போல செய்து வைக்கோல் பிரி கொண்டு சுற்றி நட்டு வைப்பார்கள்,*
கீழே மன்மதனை படமாக வரைந்து வைத்து ஆடை அலங்காரங்கள் செய்வர் தினமும் சுவாமிக்கும் அந்த மன்மத உருவகத்திற்கும் படையல் செய்த பின் 
கிராமத்து பெரியவர்கள் *நாட்டுப்புற பாடல் வடிவில் தேவர்கள் கமனிடம் அம்பு விட வேண்டுவதும், அவன் சிவகோபத்திற்கு அஞ்சி மறுப்பதும், பின் துணிவதும் இரதி தடுப்பதுமாக கதை வடிவில் கூறி ஆடியும் பாடியும் பதினைந்து நாட்களை கொண்டாடுவர்*
*பதினைந்தாம் நாள் “மாசிமகத்தன்று” காமன் சுவாமி மீது அம்பு விடுவதாக பாவித்து உடனே சுவாமியிடம் இருந்து தீப்பொறி வந்து காமன் உருவகமான வடிவத்தை பந்தலோடு எரிப்பதாக பாவித்து “காமூட்டி கொளுத்துவர்”*
காமன் எரிந்த அடையாளமாக *சாம்பல் மீது சிறிய மண் இலிங்கம் செய்து ஸ்தாபிப்பர்* அன்றிலிருந்து மூன்று நாள் வரை *”காமனை பிரிந்த இரதி இறைவனை வேண்டி அழுவதாக “ஒப்பாரி பாடல்களில்” கதை சொல்லி மூன்றாம் நாள் காமன் உயிர்ததெழுந்த அடையாளமாக அந்த சாம்பல் மேட்டில் ஒரு புதிய செடியை நட்டு வைப்பர்*
கும்பகோணம் அருகே *கற்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் நடக்கும் இவ்விழாவில் ஆமணக்கு செடி ஒன்றை இரண்டாக வெட்டி நட்டு வைப்பர், இது சில நாட்களில் உயிருடன் முளைத்து வந்துவிடும் அதிசயம் நடப்பது இறைக்கருணைக்கு எடுத்துக் காட்டாம்*

 

இதுதான் விழாவின் பொதுவான நடைமுறை கதைப்பாடல்கள் இல்லை என்றாலும் இன்றும் பல இடங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது
நம் திருமுறைகளில் பாடலுக்குப் பாடல் சொல்லப்பெறும் *காமனை அட்டுதலும் விழாவின் சங்க கால பழமையும், தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டமும் ஆன* இதையெல்லாம் நின்று கூட கவனிக்காமல் நாம் எங்குதான் இத்தனை வேகமாக செல்கிறோம் என்று தெரியவில்லை

You may also like...

Leave a Reply