[:en]2019 தேர்தல் களம் – மூன்றாவது அணி அமையுமா? – ஆர்.கே.[:]
[:en]
இன்னும் 10 மாதங்களே பிரதமர் நரேந்திர தாமோதர் மோடியின் பாஜக ஆட்சி நடைபெற உள்ளது. அதன் பின்பு இது விடைபெறுமா? அல்லது நடைபெறுமா? என்பதை தீர்மாணிக்கும் நாடாளுமன்றத் தேர்தல், வரும் 2019 ஆண்டு மே மாதத்தை ஒட்டி நடக்க உள்ளது.
வரப்போகின்ற தேர்தல் களங்கள் எப்படி அமைய வாய்ப்புள்ளது என்று பலரும், பல கணிப்புகளை சொல்லி வருகின்றனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா? இல்லை மக்களின் ஏகோபித்த ஆதரவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? அல்லது இவர்கள் இருவரும் அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளதா? என்பது எல்லாம் விவதாங்களாக ஊடகங்களில் நடந்து வருகின்றன.
2019 தேர்தல் களம் பாஜகவுக்கு, ஒரு பெரும் நெருக்கடியான நிலையாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மக்களின் அதீத வெறுப்பை இந்த அரசாங்கம் சம்பாதித்துள்ளது. பொருளாதார மந்தம், பண மதிப்பிழப்பில் பயன் இல்லாமை, கருப்பு பண மீட்பில் தாமதம், வெற்று வாக்குறுதிகள், வேலைவாய்பின்மை, சிறுபான்மையினருக்கான பாதுகாப்பின்மை, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு அச்சுறுத்தல், ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்கள் வளர்ச்சியின் பெயரால் கையப்படுத்தல், இயற்கை மற்றும் சுற்றுசுழல் மேல் அக்கரையின்மை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நாங்கள் சொல்லியதையெல்லாம் செய்துள்ளோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்த செயலால் மக்களிடம் என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று பார்த்தால் எந்த விளைவுகளையும் அது ஏற்படுத்தியதாக தெரியவில்லை. திட்டங்கள் என்னவோ பயன் அளிக்க கூடிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டாலும், அது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றால், வெகுஜனங்கள் சொல்வது மோடிக்கு ஓட்டு இல்லை என்றே.
இதை உணர்ந்த பாஜக கூட்டணி கட்சிகளில் சில, அடுத்து மோடி பிரதமராக நிறுத்தப்பட்டால் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று அச்சுறுத்தியுள்ளன. அதன் நெருங்கிய கூட்டணி நண்பனான சிவசேனா பாஜக செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. பல பாஜக முன்னாள் அமைச்சர்கள் மோடியின் செயல்பாடுகளை வரவேற்கவில்லை. ஆகையால் அதன் தலைமை கழகமான ஆர்.எஸ்.எஸ். மோடிக்கு மாற்று தேடிக் கொண்டிருக்கிறது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் அடிபடுகிறது. இன்னும் சொல்லப்போனால் பழைய காங்கிரஸ்காரர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பெயரும் அடிபடுவதாக சொல்லப்படுகிறது. அவரின் ஆர்எஸ்எஸ் நெருக்கம் அவ்வமைப்பின் நாக்பூர் நிகழ்ச்சியின் போது காண முடிந்தது.
ஆக மோடிக்கு டாடா கொடுக்க ஆர்எஸ்எஸ் நினைக்கிறது என்பது அம்பலமாகியுள்ளது. ஆக ஐந்து வருடகாலம் மக்கள் மீண்டும் ஒரு பின்னடைவைத்தான் சந்தித்துள்ளார்கள். இவர்களின் ஐந்தாண்டு ஆட்சி எந்த ஒரு சாமானியனின் வாழ்க்கையிலும் வளர்ச்சியை கொண்டு வர வில்லை என்பதே நிதர்சனம்.
சரி மோடி இல்லாத பாஜக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்திடுமா? அல்லது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிடுமா என்றால், இனி ஒரு பாஜக ஆட்சி இந்தியாவுக்கு வேண்டாம் என்றே மக்கள் நினைக்கும் நிலைக்கு அதன் செயல்பாடுகள் உள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்.
ஆக காங்கிரசுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும், அதை காங்கிரஸ் எப்படி செயல்படுத்தப் போகிறது? ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்பதும் கேள்வியாக உள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு போதிய அனுபவம் இன்மை ராகுலிடம் இருப்பதாகவே நம்புகின்றனர். மீண்டும் ஒரு சோதனை முயற்சியாக மோடியிடம் நாட்டைக் கொடுத்ததைப் போல் ராகுலிடம் கொடுப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
அடுத்ததாக மூன்றாவது அணி மாயாவதி, முலாயம், மம்தா, கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், கெஜரிவால் என்று ஒரு கூட்டணி ஏற்படும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் கெஜரிவால் டெல்லி கவர்னரின் செயல்பாடுகளையும், மோடி அரசையும் எதிர்த்து உள்ளிருப்பு போரட்டத்தை கவர்னரின் அலுவலகத்தில் நடத்தினார். டெல்லி மாநிலத்தின் செயல்பாடுகள் அத்தனையும் ஸ்தம்பித்தது. அரசமைப்பு சட்டத்தின் நெருக்கடி அங்கு நடைபெற்றது. இப்பிரச்னையை தீர்க்க சொல்லியும், கெஜரிவாலின் போரட்டத்திற்கும் நான்கு மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்தனர். கெஜரிவாலை சந்திக்க முயற்சித்து, மோடி அரசின் தலையீட்டில் போராட்டக் களத்தில் சந்திக்க முடியாமல், இப்பிரச்னையில் தலையிட பிரதமர் நான்கு முதலமைச்சரர்களாலும் வற்புறத்தப்பட்டார். அது சமயம் 11 பிரதான கட்சிகள் இந்தியா முழுவதும் ஆதரவு கரம் நீட்டின. தமிழகத்தில் திமுக இப்போராட்டத்தை ஆதரித்தது. இப்படியாக மோடி அரசுக்கு எதிராக அணி திரளும் அணிகள் பொது வேட்பாளராக கெஜரிவாலை மோடி அல்லது பாஜக முன்னிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக களம் காண வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. காரணம் டெல்லியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை மண்ணை கவ்வ வைத்து சாதனை செய்தவர் கெஜவரிவால். அந்த ஆத்திரம் இன்னும் பாஜகவுக்கு தீரவில்லை. பாஜக மட்டும் அல்ல காங்கிரசுக்கும் அவரின் மேல் மிகுந்த வெறுப்பே உள்ளது. டெல்லியில் ஷீலா தீட்சித்தின் ஆட்சியும் அங்கு கவிழ்ந்தது. ஆக காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைய வாய்புள்ளது அல்லது அதன் ஆதரவோடு கூடிய எதிரணியும் அமையலாம். இன்னும் சில மாதங்களில் அரசியல் களத்தில் கூட்டணிகளின் தெளிவு பிறக்கலாம், 2019 தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கலாம்.
[:]