[:en]வளர்ச்சி அரசியலா? இல்லை வளங்கள் சுரண்டலா?  …..   ஆர்.கே.[:]

Advertisements

[:en]

 

அரசியல்வாதிகளுக்கு தேர்தல் என்றாலே ஜுரம் பிடித்துக் கொள்கிறது.  ஏன்  என்றால்  எல்லா  தேர்தல்களும் பண பலத்தால் தீர்மானிக்கப்படுகிறது.  மக்களை  பணத்தால் விலை பேசும் இழிவான போக்கு நடைமுறைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.  ஆக  எல்லா  கட்சிகளும் தேர்தலுக்குள் தங்கள் பண பலத்தை அதிகரித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கின்றன.

அது ஆளும் கட்சி, எதிர்கட்சி, துண்டு கட்சி என்று  எதுவும் விதிவிலக்கல்ல.  கொள்கை சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த அரசியல் காணமல் போய்,  சுய நலம்,  தன் கட்சி நலன், தொண்டர் நலன் என்ற  குறுகி வட்டத்தில் கட்சிகள் பயணிக்கின்றன.  இதற்காக  எந்த  ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் வரி பணங்கள்  சுரண்டப்படுகின்றன. சூறையாடப்படுகின்றன.

இதற்கு   அரசு  இயந்திரம்  மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவது சமீப காலங்களில் அதிகரித்து  வருகிறது.  ஆளும் கட்சியாக இருக்கின்ற மத்திய, மாநில அரசுகள்  தங்கள்  வளங்களை  பெருக்கிக் கொள்ள, மக்கள் வளங்கள், இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்றனர். அவர்களும் அதற்கு ஈடாக தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு பெரும் தொகையை கொடுக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக துத்துகுடி ஸ்டெரிலைட் ஆலைப்  பிரச்னையின்  போது,  ஸ்டெரிலைட்  ஆலை  தாங்கள் யாருக்கெல்லாம் பணம்  கொடுத்தோம்,  எவ்வளவு கொடுத்தோம்  என்பதை வெளியிட  வேண்டி இருக்கும் என்று மிரட்டியதைச் சொல்லாம்.  இப்படியாக  தனியார் முதலாளிகளை நம்பி அரசியல் நடத்தும் இழி நிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துள்ளன.

அரசாங்க கஜனாக்கள்  இலவசங்கள் என்ற பெயரில்  சூறையாடப்படுகின்றன.  அரசியல்வாதிகளும்,  அரசு அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையில் கஜனாக்கள் காலியாகின்றன. வெளிநாட்டின்  இந்தியர்களின் கருப்புப் பண சேர்க்கையின் சதவீதம் சமீப சுவிஸ் வங்கி வெளியிட்ட அறிக்கைப்படி 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வருகிறது. எப்படி வருகிறது இவர்களுக்குப்  பணம்?  அரசாங்கங்கள் என்ன செய்கின்றன?

ஒரு வகையில் மக்களும் இதற்கு காரணமே?  ஓட்டை விலைக்கு விற்கும் போது,  மக்களுக்கு மனசாட்சியோடு வேலை செய்ய அரசியல்வாதிக்கு என்ன தேவை இருக்கிறது என்றாகி போகிறது. ஆகையால் அரசு துஷ்பிரேயோகம் அதிகமாகிறது.  யோக்கியமற்ற மக்கள், யோக்கியமற்ற அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் சூழல் ஆகிவிடுகிறது. ஆக தேர்தல் சீர்திருத்தம்,  அரசியல் சீர்திருத்தம் எல்லாம் வெட்டிப் பேச்சாகத்தான் தெரிகிறது. அதை செயல்படுத்த யாரும் இன்னும் முன் வரவில்லை.

ஆக பணம் தேவை. பதவியை பிடிக்க என்பது நிதர்சன உண்மையாகிப் போனதால். வளங்கள் வளர்ச்சியின் பெயரில் விற்கப்படுகின்றன  என்ற  குற்றச்சாட்டு வலுத்து வருகிறது சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்தது.  அது எல்லாம் நாசகாரத் திட்டங்கள்,  இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அல்லது நாசப்படுத்தி பணம் சேர்க்கும்  திட்டங்கள் என்று  போராட்டங்கள் வலுப் பெற்றன.  இயங்கிக் கொண்டிருந்து ஒரு ஆலைக்காக 13 பேர்  உயிர் தியாகம் செய்து மூடப்பட்டுள்ளது.  பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்ட வேலைகள்  முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. பல திட்டங்கள் மேலும், மேலும் வந்து கொண்டிருக்கின்றன.  அதற்கு உதாரணமாக 8 வழிச் சாலை திட்டத்தை சொல்லலாம்.  அத்தனை அவசரமாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.  பலத்த எதிர்ப்பையும் இத்திட்டம் சந்தித்து வருகிறது.  காரணம் இத்திட்டத்தில் 10,000 கோடி முதலீடாகிறது.  தேர்தலுக்கு இருப்பதோ இன்னும் 10 மாதங்களே பாக்கி. அதற்குள் திட்டங்களினால் என்ன ஆதாயம் பார்க்க முடியும் என்று ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் முனைந்து திட்டங்களை செயல்படுத்தப் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

உண்மையில்  இத்திட்டங்கள் மக்களின் நலனில் அக்கரையா? இல்லை வளங்களை சுரண்டும் திட்டங்களா? என்பதை அவரவர் தீர்மானத்திற்கே விட்டுவிடுவோம். ஒருவேளை இத்திட்டங்கள் நிறைவேறினாலும், நிறைவோறவிட்டாலும் எல்லா வகையிலும் பாதிக்கப்படுவது மக்களாகவே இருக்கிறார்கள்.  இதற்கு பல்வேறு உதாரணங்களை தர முடியும். ஏன் என்றால் திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்பதல்ல அரசியல்வாதிகளின் நோக்கம். திட்டங்களால் தங்கள்  நலன் பாதிக்கப்படாமல் இருக்க  வேண்டும் என்பதும்  சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.  இதற்காகவே  வேண்டாம் என்றாலும் திட்டங்கள் திணிக்கப்படுகிறது. தேவையான எத்தனையோ திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆக  வளர்ச்சி  என்ற பெயரில் வளங்கள் கொள்ளயடிக்கப்படாமல்,  உண்மையான  இயற்கை வளங்களை நாசப்படுத்தாத,  எதிர்கால  சந்ததியினருக்கு ஒரு ஆரோக்கியமான  சூழலை  ஏற்படுத்த வேண்டியது எல்லோருடைய  கடைமையாகும்.  இதை  மனதில் வைத்து செயல்பட்டால்  எல்லா  திட்டங்களும்  மக்கள்  நலன் சார்ந்த திட்டங்களாக இருக்கும்.

[:]

You may also like...

Leave a Reply