தமிழக லோக்ஆயுக்தா,   பல்லிளிக்குமா  அல்லது  பயனளிக்குமா?-  ஆர்.கே.

Advertisements

 

தமிழகத்தில் லோக்ஆயுக்தா?  நம்ப முடியவில்லை. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். வந்துவிட்டது. ஆம் வராது வந்த மாமணியாக லோக்ஆயுக்தா வந்துள்ளது.

இந்தியா முழுமைக்கும் ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட வேண்டிய சட்டமான லோக்பாலை கொண்டு வர சமூக சேவகர் அன்னா ஹாசரேயால்  ஊழல் ஒழிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் கொந்தளிப்பும், கோரிக்கைகளும்,  உண்ணாவிரதங்களும் நடைபெற்று இறுதியில் சென்ற காங்கிரஸ் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அச்சட்டம் மத்திய அரசால், நடைமுறைப்படுத்த கொள்கை முடிவாக ஏற்கப்பட்டது.

மத்திய அரசின் ஆட்சி மாற்றத்தால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டாமல் மோடி ஆட்சியில் இழுத்தடிக்ப்பட்டது.  காரணம் இச்சட்டத்தால் குஜராத் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் எங்கே தோண்டி துருவி எடுக்கப்படுமோ? என்ற அச்சம். ஆக கூடி பாஜக ஆட்சிக்கு வருவதற்கு அன்னா ஹாசரேக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டார்களே

தவிர, ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. காரணம் லோக்பால் மத்திய அரசில் நடைமுறைக்கு இன்னும் வந்தபாடில்லை. ஆனால் லோக்ஆயுக்தா என்று பல மாநிலங்கள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தின. அதில் கர்நாடக செயல்முறைப்படுத்திய சட்ட முன்வடிவு சிறப்பானதாக இருந்தது. நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மிகச் சிறப்பாக செயல்பட்டு. பாஜக முதல்வர் எடியூரப்பா சுரங்க முறைகேடுகளில் ஊழல் குற்றச்சாட்டு ஆளாகி,  விசாரிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒரு மாநில முதல்வரையே சிறைக்கு அனுப்பும் சக்தி மிக்கதாக லோக்ஆயுக்தா இருந்தது.

ஆனால் அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இச்சட்டம் பல் இல்லாத, பயனளிக்க தக்க வகையில் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல், இது ஒரு கண் துடைப்புச் சட்டமாகவும் இருக்கின்றது.

சமீபத்தில் இச்சட்டம் எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்,  கட்டாயம்  கொண்டு வரப்பட வேண்டிய நிலைக்கு மாநில அரசுகள் சென்றன.

அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் இச்சட்டம் வருகிறதே தவிர, ஆட்சியாளர்களால், இந்த நல்ல சட்டம் ஊழலை ஒழிக்க கொண்டுவரப்படவில்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். காரணம் இச்சட்டத்தை கொண்டு வர அவசியம் இல்லை என்று தங்கள் வாதமாக நீதிமன்றத்தில் வைத்தவர்கள்தான் தமிழக ஆட்சியாளர்கள் என்பதை யாரும் மறந்துவிடமாட்டார்கள்.  அத்தனை உத்தமர்கள் இவர்கள்.

வேறு வழியில்லாது நீதிமன்ற அவமதிப்புக்கு பயந்து கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் மத்தியில் இது வரவில்லை என்பது நீதிமன்றதுக்கே வெளிச்சம். அதோடு மட்டுமல்லாமல் இச்சட்டத்தில் தேவையான அம்சங்களை இவர்களே அமைத்துக் கொள்ளலாம் என்பதில் இருந்து, இதை ஒரு பல்லில்லாத அமைப்பாக அமைப்பதில் எல்லா மாநில அரசுகளும் குறியாக உள்ளன. காரணம் ஊழல் செய்து தானே மாட்டிக் கொள்ள கூடாது என்ற அதிக கவனம் இவர்களிடம்.

இப்போது தமிழகத்தில் அமைந்துள்ள லோக் ஆயுக்தா சட்டமும் அத்தகையதே என்று எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் சொல்லி வருகின்றனர்.

இச்சட்டத்தின் படி யாரை வேண்டுமானலும் ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கலாம். அரசாங்க ஊழியர், அதிகாரிகள்,  அமைச்சர்கள்  என்று  பொது ஊழியம் பாக்கக் கூடிய அரசு ஊழியர்கள் இச்சட்டத்தின் கீழ் விசாரிக்க தகுதி உள்ளவர்களாக அறியப்படுகின்றனர்.

முகாந்திரம் இருந்தால் லோக் ஆயுக்தா சம்பந்தப்பட்டவர்கள்   தானாகவே மீது விசாரணையை தொடங்கலாம். யாரும் வழக்கு தொடக்க வேண்டும் என்பது கூட கிடையாது.  முதலமைச்சர் முதல் கொண்டு இச்சட்டத்தின் கீழ் வருகிறார்கள்.  லோக்ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.  அவரை  தேர்ந்தெடுக்கும் போது, எதிர்கட்சி தலைவர் மற்றும் மாநில முதல்வர்  கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று உள்ளது.

ஆனால் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவில் சபாநாயகர் அல்லது அரசு அதிகாரி தலைவராக இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் 4 வருடங்களுக்குள் உள்ள முறைகேடுகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் உள்ளது  மேலும் தவறாக புகார் செய்பவர்கள் மீது சிறை தண்டனை மற்றும் அபராதம் உள்ளது. மேலும் அரசாங்க டெண்டர் முறைகேடுகளை இது விசாரிக்க முடியாது என்பதில் இருந்து, இவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெள்ளிடை மலையாக தெரிய வருகிறது.

ஆக  தகுதியான  நியாயமான லோக்ஆயுக்தாவை வடிவமைக்க தமிழக மக்கள் போர்க்குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலமாக ஆவது  ஊழலை குறைக்க வழி ஏற்படலாம்.  அது இல்லாது இன்னும் துங்கிக் கொண்டிருந்தால் ஆட்சியாளர்களுக்குத்தான் லாபம். மக்களுக்கு அல்ல.

பல்வேறு எதிர்ப்புகுரல்களுக்கு  பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.  இதற்கு  தமிழக  மக்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டும்.  லோக்ஆயுக்தா  தமிழகத்தை ஊழல் இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்.

ஓட்டு மொத்தமா  உச்ச நீதிமன்றம் ஓரே மாதிரியான லோக்பாலில் உள்ள அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய லோக்ஆயுக்தாவில் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா முழுமைக்கும் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.  இதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் போர் குரலாக உள்ளது.

You may also like...

Leave a Reply