அம்பேலாகும் சாமி சிலைகள், அரசுக்கு ஏன் தடுமாற்றம்? – ஆர்.கே.

மதம் உலகமெங்கும் மக்களிடம்  செல்வாக்குப் பெற்ற அமைப்பு. அம்மத கோட்பாடுகள் பெரிதாகவும், புனிதமாகவும் நினைக்க கூடிய கோடிக் கணக்கான மக்கள். அம்மதத்தின் உயர்வைச் சொல்லும் அல்லது புனிதமாக கருதக் கூடிய கலைப் பொக்கிஷங்கள் என்று காலகலமாக  எல்லா மதங்களிலும் அதற்கான கட்டமைப்புகள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் நமது ஆலயச் செல்வங்களான சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் தீனதயாளன் என்ற சர்வ தேச  சிலை மாபியா கைது செய்யப்படுகிறார். அவரின் கட்டுப்பாட்டில் கடத்திக் கொண்டு வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோயில் சிலைகள் கைப்பற்றப்படுகின்றன.  இவ்வழக்கை கையாண்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மிகச் சிறப்பாக செயல்பட்டதின் அடிப்படையில் அவரிடம் ஒட்டு மொத்தமாக 500ம்கும் மேற்பட்ட சிலைக் கடத்தல் வழக்குகளை  சிறப்பு நீதிமன்றம் அமைத்து,  ஐ.ஜி பொன்மாணிக்க வேல்  தலைமையில் வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வழக்கை விசாரிக்க ஆரம்பித்த பொன் மாணிக்க வேலுக்கு அரசின் அழுத்தம் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு எதிராக இருந்தது. காரணம் பொன்.மாணிக்க வேல் ஒரு அப்பழுக்கற்ற, நேர்மையாக அதிகாரியாக கருதப்படுவதே.

சிலைக்கடத்தல் என்பது காலகாலமாக நடைபெற்று வந்தாலும்,  சமீபத்திய 50 ஆண்டுகளில் இரண்டு திராவிட ஆட்சிகாலங்களிலும், திட்டமிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.  இதற்கான ஆதாரங்கள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலுவிடம்  இருப்பதால், அரசாங்கம் அச்சத்தில் உள்ளது. இதில் ஆளும் அதிமுக முதல் எதிர்கட்சியான திமுக வரை சம்பந்தம் உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் மற்றம் இன்னாள் அமைச்சர் வரை சம்பந்தம் உள்ளது அவர்களை காப்பாற்றத்தான் பொன்.மாணிக்க வேலுவுக்கு அரசாங்கம் இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகிறது என்று பா.ம.க. தலைவர் அன்பு மணி இராமதாஸ் கூறுகிறார்.

நேற்று நடந்த நீதிமன்ற வழக்கில் அரசாங்க வழக்கறிஞர் இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். இது அரசின் கொள்கை முடிவு என்று கூறுகிறார். எதில் எல்லாம் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லை என்பதை இது காட்டுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடக்கும் ஒரு வழக்கு விசாரணையின் போக்க மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. அதில் முறைகேடுகள் எதுவும் இருப்பதற்கான முகாந்திரம் இல்லாமல் இக்கோரிக்கைகள் ஏற்கப்பட கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பொன்.மாணிக்க வேலு  மேல்  அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை யாரும் சொல்லவில்லை. அவ்வாறு இருக்க மடியில் கனம் இருப்பதால் அரசு மாற்று வழி தேடுவதாக சொல்லப்படுகிறது. இது அரசாங்கம்  தன் கீழ் உள்ள அமைப்பின் மீதே தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுவது போல் வாக்குமூலம் தருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முறைகேடுகள், திருட்டுக்கள் நடந்துள்ளது. அதைக் கண்டுபிடிக்க பொன்.மாணிக்க வேலுவே சிறந்த அதிகாரி. அவர் அப்பிரிவில் பல வருடங்கள் பணியாற்றியவர் என்பதும், சமீபத்தில் 50 வருடங்கள் முயற்சியில் மீட்டெடுக்க முடியாமல் இருந்த இராஜராஜன் சிலையை மீட்டு கொண்டு வந்ததும், அவரின் சாதனையாக சொல்லப்படுகிறது.

சிபிஐ கோருவது வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும். இவ்வழக்கு குறித்து போதிய விவரங்கள் இல்லா சிபிஐக்கு இதில் வெற்றி காண்பது சிரமம் என்பதும்.  பல்வேறு வழக்குகளில் சிபிஐ வெற்றி காண முடியாது வழக்கை முடித்துக் கொண்டதும், சிபிஐக்கு மாற்ற எதிர்கருத்துக்கள் சொல்பவர்களின் கருத்தாக உள்ளது.

ஆக ஒழுங்காக நடக்கும் விசாரணையில் அரசு தலையீடு செய்யாமல் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கும் பொன்.மாணிக்க வேலுக்கு அரசு ஒத்துழைப்பு நல்கி, லட்சம் கோடி மதிப்புடைய நம் கலை பொக்கிஷங்களை மீட்டெடுக்க வேண்டும். இதில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை கொடுக்கும் என்று நம்பலாம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *