அரசியல் சூரியன் கலைஞர் மறைவு –  ஆர்.கே.

Advertisements

கலைஞர் மு.கருணாநிதி காலமானார். 94 வயது பூர்த்தியடைந்து, உடல் நலிவுற்று கடந்த 29 ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு,  நேற்று மாலை 6.10 மணிக்கு உடலைவிட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசியலில் உதய சூரியனாக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து,  அரசியல் சூரியனாக மறைந்து போனார்.  அன்னாரின் மறைவுக்கு உலகமெங்கும் வாழும் தமிழுர்கள், தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகத்தான தலைவர் கலைஞர். மு. கருணாநிதி. தி.மு.க என்ற கட்சி அறிஞர்  அண்ணாவிற்குப் பிறகு, கலைஞரின் வழிகாட்டுதலில் ஒரு ஆலமரமாக வளர்ந்து,  இன்றுவரை அசைக்க முடியாத சக்தியாக, தவிர்க்க முடியாத அமைப்பாக வளர்த்தெடுத்தவர்.

எம்.ஜி.இராமச்சந்திரன் திமுக கழகத்தை விட்டு வெளியேறி அதிமுக கழகத்தை தோற்றுவித்த போது எழுந்த எதிர்ப்புகளை சந்தித்தவர். எம்ஜிஆரை எதிர்த்து அரசியல் செய்தவர். 14 ஆண்டு காலம் எதிர்கட்சியாகவே செயல்பட்ட போதும், தனது கட்சியை கட்டுப்கோப்பாக செயல்பட வைத்தது, அனைவரையும் வியக்கச் செய்தவர்.

தனது வளர்ப்பாக இருந்தது வந்த வை.கோ.வை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியை விட்டு நீக்குகிறார். வை.கோ. திமுகவில் இருந்து விலகியபோது, திமுகவின் பல மாவட்ட செயலர்கள் விலகுகிறார்கள். அதன்போதும் கலங்காது, தனது முடிவுகளின்படி தொண்டர்களை அழைத்துச் சென்றவர் கலைஞர்.

செல்வி. ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்குப்பின் அதிமுக பொதுச்செயலாளராகி முதலமைச்சரான போதும், ஒரு பெண் முதல்வரை எதிர்த்து அரசியல் செய்தவர் கலைஞர். அவரின் மீது பல வழக்குகளை புனைந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்பிரமணிய சுவாமியுடன், அரசையும் அந்த வழக்கில் இணைத்து,  18  ஆண்டுகளுக்குப்பின்  தண்டனையை வாங்கித் தந்தவர்.  இரண்டாண்டுகளுக்கு முன் அவரின் மறைவுக்கு,  அவரின்  குடும்பத்தாரை  நலம் விசாரிக்க அனுப்பி அரசியல் நாகரிகம் காக்கச் செய்தவர்.

தொண்டர்களுடனான அவரின் இணைப்பு, பிணைப்பு மிகவும் இறுக்கமானது,  அவரின் கழக உடன்பிறப்புகளே என்ற வார்த்தையில் திமுக தொண்டர்கள் புதிய உத்வேத்தை அடைவார்கள். அவரின் பொதுக்கூட்டம் என்றால் மக்கள் அலைஅலையாக வருவதைப் பார்க்கலாம். அவரின் பேச்சைக் கேட்க எதிர்க்கட்சியினரும் வருவதை அவரின் பேச்சாற்றலை நிரூபிக்கும் செயலாக இருந்தது.

சினிமாவில் வசனகர்த்தாவாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்த கலைஞர், பராசக்தியில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனத்தை இன்றும் நினைவு கூறத்தக்கது, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்பாடு  செய்யவும்,  சமூகத்தில் மலிந்துள்ள மடமைகளுக்கு எதிராக போராடவும் தனது பேனா முனையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தார்.

முரசொலியில் அவர் திமுக கழக தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் திமுக தொண்டர்களிடத்தில் மிகவும் வரவேற்பையும், அரசியலை அவர்களுக்கு கற்றுத் தரும் இடமாகவும் பார்க்க முடிந்தது.

இலக்கியத்திலும் தனது முத்திரைகளைப் பதித்தவர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதினார். திருக்குறள் பதிப்புகள் மக்களிடம் சென்றடைய எத்தனை முயற்சிகளை எடுக்க முடியுமோ, அவைகளை எல்லாம் செய்தார். தமிழறிஞர்களை மதித்து நடந்தார். அவர்கள்பால் மிகுந்த அச்சமும் கொண்டிருந்தார். அது அவர் தமிழுக்கு செய்யும் மரியாதையாக காணப்பட்டது.  தமிழை செம்மொழியாக்க அறிவிக்க கோரி தொடர் போரட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் செய்து, இறுதியில் அதை சாதித்தும் காட்டியவர்,  ஒடுக்கப்பட்டவர்களிலும் உள் ஒதுக்கீடு கொடுத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார்.  முன்னாள் பாரத பிரதமர் வி.பி.சிங் மூலம் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீட்டு பரிந்துரையான மண்டல் பரிந்துறையை அமல் செய்ய மிகுந்த முயற்சியை எடுத்துக் கொண்டவர்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர். அனைவரும் அர்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.  பெண்களுக்கு சொத்துரிமை, திருநங்கைகளுக்கு அங்கீகராம், கர்பிணி  பெண்களுக்கு  உதவி,  கைம்பெண் மறுமணம்,   விதவை  மறுவாழ்வு திட்டம்,  விதவை பென்ஷன்,  என  பெண்களுக்கான  நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். ஆரம்ப கால கட்டத்தில் முதல்வராக இருந்தபோது, கண்ணொளி திட்டம், கை ரிக் ஷா  ஒழிப்புத் திட்டம், குடிசை மாற்று வாரியம், என்ற சமூக மாற்றத்திற்கான திட்டங்களை வடிவமைத்தவர். இவரின் பல்வேறு திட்டங்கள்,  பின்னால் வந்த எம்.ஜி,இராமச்சந்திரனுக்கு முன் மாதிரியாக திகழ்தது.

இவரின் ஆட்சியின் மீது ஊழலுக்காக சர்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு இவருக்கு சிறிது பின்னடவு ஏற்பட்டாலும்,  அதில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டவர். அரசியல் சாணக்கியம் மிகுந்தவர்.  இவரை  கடுமையாக விமர்சிப்பவர்களும் எதோ ஒருவகையில் இவரின் விசிறியாகவே இருந்தனர். அத்தகைய ஆளுமை இவரிடம் இருந்தது. பல்நோக்கு வித்தகராக இருந்தார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர்.  ஒரு முறை பாரத பிரதமராக ஆகும்படி  இவருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதை மறுத்து தனது பணி இன்னும் தமிழகத்திற்கு முழுமையாக  தேவை என்றும், எனது தகுதியை நான் அறிவேன் என்றும் அதை மறுத்தார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும்,  எதிர்கட்சியாக இருந்தாலும் தனது அரசியல் பணியை சிறப்பாக செம்மையாக செய்தவர். சிலபல விமர்சணங்கள் இவரின்பால் இருந்தாலும் குறிப்பாக இறுதி கட்டத்தில் கடைசியாக முதல்வராக இருந்தபோது, இலங்கையின் யுத்தத்தை நிறுத்த உதவவில்லை என்று கூறப்பட்டது. காவேரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு திரும்ப பெற்றது.  மத்திய அரசு கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது  போதிய    அழுத்தங்களை கொடுக்காது என்று இன்றும் இவரின்பால் விமர்சனங்கள் உண்டு. அரசியலில் விமர்சனங்களுக்கு அப்பாற்பாட்டவர்கள் என்று எவரும் இல்லை. இருக்கவும் முடியாது என்பதான் உண்மையாக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் 70 ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றிய மகத்தான தலைவர். அவரின் பணிகளை நினைவு கொள்வது,     அவருக்கு நாம் செலுத்தும் புகழ் மாலையாக கொள்வோம்.

You may also like...

Leave a Reply