என்று தணியும் இந்த தண்ணீர் தாகம் மதகுகள் நாசம்  ஏன்? ……… ஆர்.கே.

காணாத காவிரி நீரை காண 30 ஆண்டுகாலம் போராடி உச்சநீதிமன்றத்தில் நீதியை பெற்ற பிறகும், கர்நாடக நீரை திறந்துவிட மறுத்து வந்தபோதும், சமீபத்தில் பெய்த பருவமழையால் கேரள, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து, வரலாறு காணத வெள்ளம் போனது.

அம்மாநிலங்களின் உபரி நீர் வழியில்லாது, கர்நாடகாவால் திறந்துவிடப்பட்டது. அவ்வாறு திறந்துவிடப்பட்ட உபரி நீர் விநாடிக்கு 2 லட்சம் கண அடிக்கு மேலாக வெளியேறியது. இப்படியாக அபரிவிதமான தண்ணீர்  தமிழத்தை நோக்கி வந்தபோதும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் அங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக குடிமராமத்து பணிக்கென்று 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அது சரிவர செலவு செய்யப்படாமல், ஆளும் கட்சியினரின் முறைகேடுகளால்,  ஏரி, குளம், கம்மாய்கள் துர்வாரப்படவில்லை என்றும், ஆகையால் தண்ணீர் ஆங்காங்கே தடைபட்டு, வீணாக கடலில் கலக்கின்றது என்றும், விவசாயத்திற்கு பயன்படவில்லை என்றும் அரசை குற்றம் சாட்டுகின்றனர்.

ஆளும் அதிமுக அரசு  வரன்முறையில்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதாலேயே இத்தகைய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது, என்று எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றன.  மக்களுக்கான  அரசாக எந்த அரசும் செயல்படவில்லை.  ஜனநாயகம் படிப்படியாக தோற்று வருகிறது. மக்களின் ஈற்றுப்போன குணநலன்களால் இத்தகைய நிலைப்பாடு எற்படுகிறது. தவறான மனிதர்களை தலைவர்களாக தேர்ந்தெடுப்பது என்று ஒழியுமோ  அன்றுதான் முறையான ஆட்சி நிர்வாகம் ஏற்படும். அதற்கு மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இரு தினங்களுக்கு முன் முக்கொம்பில் கொள்ளிடம் மதகுகள்  வெள்ளத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.  இதற்கு காரணம் முறையாக மதகுகள் பராமரிக்கப்படவில்லை என்றும், அதற்கான பணியாளர்கள் இல்லை என்றும், காண்ட்ராக்டாக விடப்படும் இப்பராமரிப்பு பணியில் ஊழல் என்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிகாரிகள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

அதுபோக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை அடிப்பது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆதலால் மதகுகளுக்கு அருகில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, மண் அரிப்பை சரியாக கணக்கிட முடியாமல், அதற்கான பராமரிப்பு பணிகளை செய்ய முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இப்படியாக முறைகேடுகள் உச்சமாக அதிமுக அரசின் செயல்பாடுகளில் உள்ளதால், கடைமடை பகுதிக்கு நீர் செல்லாதது மட்டுமல்ல, அணையும் ஆபத்தில் உள்ளதாக நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

இப்படியாக மக்கள் நலனில் அக்கறை காட்ட நேரம் இல்லாது, இவர்கள் என்ன ஆட்சி செய்கிறார்கள் என்று அனைவரும் கேட்கின்றனர். விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லை என்றாலும் பிரச்னை, தண்ணீர்  வந்தாலும் அது அவனுக்கு உபயோகம் இல்லாமல் கடலில் கலப்பதும் பிரச்னையாக, சரியான திட்டமிடல் இல்லாது இந்த ஆட்சி செய்யும் அலங்கோலத்தால் காவேரி டெல்டா பகுதி மீண்டும் போர்கோலம் ஆகியுள்ளது. என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *