டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை


டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு மருத்துவ துறையில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறிப்பாக எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதாவில் ஏழைகள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு எதிரான பல்வேறு பிரிவுகள் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ள டாக்டர்கள், இந்த மசோதா ஜனநாயக விரோதமானது எனவும் கூறியுள்ளனர்.

இதனால் மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவ துறையினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு மருத்துவமனைகளான எய்ம்ஸ், சப்தர்ஜங் போன்றவற்றில் பணியாற்றி வரும் டாக்டர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் தற்போது பணிக்கு திரும்பினாலும், புறநோயாளிகள் பிரிவு, அத்தியாவசியம் இல்லாத மருத்துவப்பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை தொடர்ந்துள்ளனர். அதேநேரம் சப்தர்ஜங் மருத்துவமனையில் எந்த பிரிவிலும் டாக்டர்கள் இல்லை.

டெல்லியில் உள்ள இந்த மருத்துவமனை முன் நேற்றும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியதுடன், நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எனவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டக்காரர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் சங்கத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் துறைகளில் பணிக்கு திரும்ப வேண்டும். தவறும் பட்சத்தில் இடைநீக்கம், நிரந்தர நீக்கம், மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல சப்தர்ஜங் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சுனில் குப்தா பயிற்சி மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், இடைநீக்கம், நிரந்தர நீக்கம், விடுதியில் இருந்து வெளியேற்றுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் என்னிடம் கூறியுள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com