முதன் முதலாக சந்திரயான்-2 விண்கலம் பூமியை படம் எடுத்து அனுப்பியது


முதன் முதலாக சந்திரயான்-2 விண்கலம் பூமியை படம் எடுத்து அனுப்பியது

சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தற்போது சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

விண்கலத்தின் செயல்பாட்டை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து வருவதுடன், அதன் சுற்றுவட்ட பாதையின் உயரத்தையும் அவ்வப்போது உயர்த்தி வருகிறார்கள். சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் நேற்றுமுன்தினம் 4-வது தடவையாக உயர்த்தப்பட்டது.

பூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 277 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து 472 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும் சந்திரயான்-2 விண் கலத்தில் உள்ள எல்-14 என்ற நவீன கேமரா முதன் முதலாக பூமியை புகைப்படம் எடுத்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பி இருக்கிறது.

அதாவது நேற்றுமுன்தினம் மாலை 5.28 மணி முதல் 5.37 மணி வரை எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களை விண்கலம் அனுப்பி உள்ளது. சந்திரயான்-2 பூமியில் இருந்து 2,450 கி.மீ., 3,200 கி.மீ., 4,100 கி.மீ., ,4,700 கி.மீ. மற்றும் 5,000 கி.மீ. உயரத்தில் பயணித்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அடுத்த கட்டமாக நாளையும் (திங்கட்கிழமை), மறுபடி வருகிற 16-ந் தேதியும் உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் செல்லும். அதன்பிறகு நீள்வட்ட பாதையில் நிலவை சுற்றி வரும் விண்கலம் ஆகஸ்டு 20-ந் தேதி சந்திரனை நெருங்கி அதன் அருகாமையில் சுற்றிவரும்.

நிலவின் அருகாமையில் சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து சுற்றி வர, அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தரை இறங்கும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற சிறிய வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். அதுபற்றிய தகவல்களை சந்திரயான்-2 விண்கலம் பூமிக்கு அனுப்பி வைக்கும்.

சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந் தேதி நிலவில் தரை இறங்கும் காட்சியை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட இருக்கிறார். இதற் காக அவர் பெங்களூரு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடியுடன் சேர்ந்து அந்த காட்சியை பார்வையிடுவதற் காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதற் காக இஸ்ரோ, 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வருகிற 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் வினாடி வினா போட்டி நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரதமர் மோடியுடன் அமர்ந்து, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் காட்சியை காணும் அரிய வாய்ப்பை பெறுவார்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com