பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது – ஐ.நா.விடம் முறையிட முடிவு


பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது - ஐ.நா.விடம் முறையிட முடிவு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் அந்த மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் நடவடிக்கைகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், இது தொடர்பாக விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை நடத்துகிறது.

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லாடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், இதற்கு கண்டனமும் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் பிராந்தியம், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியாகும். அங்கு இந்திய அரசு மேற்கொள்ளும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எதுவும் அதன் சர்ச்சைக்குரிய அந்தஸ்தில் மாற்றம் ஏற்படுத்தாது. அத்துடன் இதை காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பாகிஸ்தான் வன்மையாக எதிர்ப்பதுடன், அதை நிராகரிக்கவும் செய்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.விடம் முறையிடுதல் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி கூறும்போது, ‘காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தீர்மானங்களையும் அது நிறைவேற்றி உள்ளது. காஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதியாக முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயும் ஏற்றுக்கொண்டு இருந்தார்’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஐ.நா., இஸ்லாமிய கூட்டமைப்பு, நட்பு நாடுகள் மற்றும் மனித உரிமை ஆணையங்களிடம் கோரிக்கையும், முறையீடும் செய்யப்போவதாக கூறிய குரேஷி, இது தொடர்பாக தங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறினார். எப்போதும் போல காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் எனவும், இந்தியாவின் முடிவு தவறானது என வரலாறு நிரூபிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதைப்போல பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டுக்கூட்டத்துக்கு அதிபர் ஆரிப் ஆல்வி நேற்று அழைப்பு விடுத்தார். அதன்படி இந்த கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com