கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும் அனைத்து ஏழை குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம்


கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும் அனைத்து ஏழை குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கத்தின் பணிகள் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்காரனையில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு மழைநீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்த, நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை தொடங்க சட்டசபையில் அறிவித்து, அதை இங்கு தொடங்கிவைப்பதில் பெருமை கொள்கிறேன்.

மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல், நிலத்தடிநீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல்,
ஆறுகள் இணைப்பு
பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல், இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைப்பிடித்தல், ஆறுகள், ஏரிகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்புநிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் ஆகியவை செயல்படுத்தப்படும். மொத்தம் 1,250 கோடி ரூபாய் நிதியின் மூலம் இப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
சென்னை மாநகரத்திலுள்ள 210 நீர்நிலைகளில், 53 நீர்நிலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 114 நீர்நிலைகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் பாயும் நதிகளை இணைத்தல், கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் எடுத்துக்கொள்ளப்படும்.
காவிரியை தூய்மைப்படுத்த…
காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை தூய்மைப்படுத்த ‘நடந்தாய் வாழி காவிரி’ என்னும் புதிய திட்டத்தை அரசு இந்த இயக்கத்தின் மூலம் செயல்படுத்தும்.
இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று, மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
தொழிலாளிகளுக்கு ரூ.2 ஆயிரம்
ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாக ஆயிரம் ஏக்கரில் ஆயிரம் கோடி ரூபாயில் கால்நடை பூங்காவை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் அனைத்து ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கும் தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, பாண்டியராஜன், பென்ஜமின், எம்.எல்.ஏ.க்கள் பலராமன், விஜயகுமார், அலெக்சாண்டர், நரசிம்மன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேகதாது அணை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். மத்திய அரசு சாதகமான பதிலை அளித்துள்ளது. தடுப்பணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. எனவே, அச்சப்பட தேவையில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, ‘முதுகெலும்பு இல்லாதவர்கள்’ என்று கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, “யார் முதுகெலும்பு இல்லாதவர்கள். அவர்கள் தான் முதுகெலும்பு இல்லாதவர்கள். 16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு தி.மு.க. என்ன நன்மை செய்தது? காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு பிரச்சினையை தீர்த்தார்களா? சுயநலத்துக்காக செயல்படுகின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். சுயநலத்துக்கும், அதிகாரத்துக்கும் பணிந்து போகின்ற கட்சியும் தி.மு.க. தான். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சினை வருகின்றபோது துணிந்து நிற்போம்” என்றார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனபாக்கத்தில் ஏரியில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com