காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது


கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
கர்நாடக அணைகள்
கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 114 அடியை தொட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 10.80 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
நீர் திறப்பு அதிகரிப்பு
இதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2,284.80 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 45 கனஅடியாக உள்ளது. அணை கிட்டத்தட்ட நிரம்பி விட்டதால் பாதுகாப்பு கருதி, அதில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்ட நிலையில் நேற்று நீர் திறப்பு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் காவிரி கரையோர பகுதியில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து மதியம் 12 மணி அளவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடியை தாண்டியது. இதனால் ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கியதால், நுழைவுவாயிலை போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்து உள்ளனர்.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அங்கு வசிக்கும் மக்களுக்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஒகேனக் கல்லில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரையிலான காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஒகேனக்கல், நாகமரை, நெருப்பூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் நேற்று முன்தினம் 54.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 8 மணி அளவில் 62.50 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *