ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் மேலும் ஒருநாள் நீட்டிப்பு

Advertisements

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் மேலும் ஒருநாள் நீட்டிப்பு - ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 21-ந்தேதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந்தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2-ந்தேதி (நேற்று) வரையும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த மனு நேற்று காலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் தனது வாதங்களை எடுத்து வைத்தார்.

அவர் கூறுகையில், ‘மனுதாரர் (ப.சிதம்பரம்) ஏற்கனவே தேவையான அளவு சி.பி.ஐ. காவலில் இருந்து இருக்கிறார். தேவையான அளவுக்கு அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இல்லையென்றால் அதிகபட்சம் அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதி வழங்குங்கள். 73 வயதான அவர் திகார் சிறைக்கு போகவேண்டுமா?’ என கேள்வி எழுப்பினார்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ.யின் நடவடிக்கைகள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. காவலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த கபில்சிபல், அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போலீஸ் காவல் வேண்டுமா? அல்லது நீதிமன்ற காவல் வேண்டுமா? என்பதை ஒரு குற்றவாளி கூறக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் மனுதாரர் இடைக்கால ஜாமீனோ அல்லது போலீஸ் காவல் நீட்டிப்பு அல்லது பிற நிவாரணங்களையோ தனிக்கோர்ட்டை நாடி பெற்றுக்கொள்ளலாம்’ என கூறினர். மேலும் இந்த வழக்கை 5-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஏற்பதாக அவர்கள் அறிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ‘ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை தனிக்கோர்ட்டு விசாரித்து இன்றே (நேற்று) உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அந்த மனு நிராகரிக்கப்பட்டால், ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்கும் வகையில் சி.பி.ஐ. காவலை 3 நாட்களுக்கு நீட்டிப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி கோரிக்கை ஒன்றை வைத்தார். அதாவது, ‘சி.பி.ஐ. காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளைக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றும் முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிரான மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், எனவே தனிக்கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் காவலை மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கலாம் என்றும் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தனர்.

இந்தநிலையில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததால் நேற்று அவர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதில் விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் சி.பி.ஐ. காவல் (15 நாள்) நிறைவுக்கு வருவதால், சி.பி.ஐ. காவலுக்கு எதிரான அவரது மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளைக்கு (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே அவரது காவலை மேலும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தங்கள் தரப்பில், இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

உடனே துஷார் மேத்தா, இந்த ஜாமீன் மனு மீது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் அவர், ‘இந்த வழக்கில் மட்டும் என்ன அப்படி தனிப்பட்ட ஒரு விசேஷம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு சாதாரண குடிமகனால் இதுபோன்று சலுகைகள் பெறமுடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கபில்சிபல், ‘இவரை நடத்தியது போல ஒரு சாதாரண மனிதனை எப்போதாவது சி.பி.ஐ. நடத்துமா?’ என்று பதில் கேள்வி எழுப்பினார்.

பின்னர், மனுதாரரை மேலும் ஒருநாள் சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை என்று கூறிய அவர், எங்கள் ஜாமீன் மனுவை தனிக்கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளட்டும், அதன் மீது நாங்கள் வாதங்களை முன்வைக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

சி.பி.ஐ. கோருவது போல நாளை காலை (இன்று) எங்கள் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு ஒப்புக்கொள்கிறோம் என்றும் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனுவை நாளை (இன்று) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். அதுவரை ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலையும் நீட்டித்து அவர் உத்தரவிட்டார்.

You may also like...

Leave a Reply