மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை

Advertisements

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை; அடுத்த மாதம் நடக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28-ந்தேதிகளில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் அங்குள்ள வுகான் நகரில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மற்றும் உலக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் பேசப்பட்டன. தேச முன்னேற்றத்துக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியும், சீனா அதிபர் ஜின்பிங்கும் விவாதித்தனர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது சீன அதிபர் ஜின்பிங்கை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, அவர் அடுத்த மாதம் 12, 13-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன அதிபர் ஜின்பிங்கை தலைநகர் டெல்லிக்கு வெளியே உள்ள நகரம் ஒன்றில் சந்தித்துப்பேச பிரதமர் மோடி விரும்புகிறார்.

அந்த வகையில் ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையை எந்த இடத்தில் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதில் சென்னையை அடுத்த மாமல்லபுரமும் இடம் பெற்றுள்ளது.

மாமல்லபுரம், உலக அளவில் பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு அனேகமாக மாமல்லபுரத்தில் நடைபெறலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறும். 11-ந்தேதி இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மாமல்லபுரத்தில் 2 பெரிய நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இவற்றில் ஒன்றில் 2 தலைவர்களும் தங்கி, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் சென்னைக்கு வந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தை சந்தித்து பேசினர்.

சீனாவில் இருந்தும் அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வந்து அங்குள்ள சூழ்நிலைகளை பார்வையிட்டனர். அப்போது பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு, சுற்றுலா ஆகியவை பற்றி ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் செய்வார்கள்.

பேச்சுவார்த்தைக்கு நடுவே மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பங்கள் மற்றும் சில முக்கிய நினைவுச்சின்னங்களை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பார்வையிடுவார்கள் என்று தமிழக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சீனாவில் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அங்குள்ள ஹுபெய் மாகாண அருங்காட்சியகத்தை இரு தலைவர்களும் பார்வையிட்டது நினைவு கூரத்தக்கது.

உலக புகழ்பெற்ற பாரம் பரிய பகுதி மாமல்லபுரம் ஆகும். இந்தியா வரும் வெளிநாட்டவர்கள், இந்த இடத்தை பார்க்காமல் செல்வதில்லை. இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில்தான் 2018-ம் ஆண்டில் ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டு, அந்த பகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டது. அந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, சீனஅதிபர் ஜின்பிங் ஆகியோர் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறபோது, அது அந்த நகரத்துக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதோடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

You may also like...

Leave a Reply