உயிருக்கு போராடிய சிறுவனை ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு 5 மணி நேரத்தில் கொண்டு சென்ற – ஆம்புலன்ஸ் டிரைவர்


உயிருக்கு போராடிய  சிறுவனை ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு 5 மணி நேரத்தில் கொண்டு சென்ற - ஆம்புலன்ஸ் டிரைவர்

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நயினார் முகமது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ஜெசிமா. இவர்களுடைய மகன் முகமது அமீர் (வயது 16). மலேசிய குடியுரிமை பெற்றுள்ள இவர், அங்கு படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த முகமது அமீருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென முதுகு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கான மருந்து-மாத்திரைகள் கொடுத்து வந்தனர். ஆனால் நோய் குணமாகவில்லை.

கடுமையான வலி காரணமாக முகமது அமீர் கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் முகமது அமீருக்கு மீண்டும் முதுகு வலி அதிகமானதால் உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோயின் தீவிரம் அதிகமாகி உள்ளதாகவும், 4 முதல் 5 மணி நேரத்திற்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மதுரை சென்று விமானம் மூலம் புதுச்சேரிக்கு செல்வதற்கு நேரம் அதிகமாகும் என்பதால் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. த.மு.மு.க.வின் ஆம்புலன்சில் முகமதுஅமீர் ஏற்றப்பட்டு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் ஜாஸ் என்பவர், சிறுவனுக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்து மிகவும் விழிப்புடன் செயல்பட்டார்.

இதனால் வேகமாக அவர் புதுச்சேரியை நோக்கி ஆம்புலன்சை ஓட்டினார். செல்லும் வழியில் முன்அறிவிப்பு செய்ததன் பயனாக த.மு.மு.க. தொண்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் சாலையில் போக்குவரத்தை சரிசெய்து வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

5 மணி நேரத்திற்கு முன்னதாகவே கொண்டு சென்று சேர்த்து, உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் முகமது அமீர் தற்போது நலமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். பொதுவாக ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மிதமான வேகத்தில் சென்றால் 9 முதல் 10 மணி நேரமாகும்.

ஆனால் சிறுவனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியாலும், வழிநெடுகிலும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதாலும் 4 மணி நேரம் 50 நிமிடங்களில் கொண்டு செல்ல முடிந்ததாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு செல்ல உதவியவர்களுக்கு சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதே போல் சமயோஜிதமாக செயல்பட்டு ஆம்புலன்சை ஓட்டிச் சென்ற டிரைவர் ஜாசுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *