விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டம்

Advertisements

 Print60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பதிவு: செப்டம்பர் 13,  2019 05:30 AMராஞ்சி,

நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, மீண்டும் பதவி ஏற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் மந்திரிசபை கூட்டம் மே மாதம் 31-ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில், 60 வயது கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை ‘பிரதம மந்திரி கிஷான் பென்ஷன் யோஜனா’ என்ற பெயரில் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதே போன்று சிறு வர்த்தகர்களுக்கும் கடை வியாபாரிகளுக்கும் ‘பிரதம மந்திரி லெகு வியாபாரி மான் தன் யோஜனா’ என்ற பெயரிலும், சுய வேலையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு ‘சுவரோஜ்கார் பென்ஷன் யோஜனா’ என்ற பெயரிலும் ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது.

இந்த ஓய்வூதிய திட்டங்களில் 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் சேர்ந்து பலன்பெற முடியும். இவர்கள் தங்களுடைய சுய பங்களிப்பாக வயதுக்கு ஏற்ப மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை கட்டணம் (பிரிமியம்) செலுத்த வேண்டும். 60 வயது நிறைவடைந்தபின்னர் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டங்களின் தொடக்க விழா, பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, விவசாயிகள், வியாபாரிகள், சுய வேலை வாய்ப்பு நபர்கள் ஓய்வூதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பயனாளிகள் சிலருக்கு அவர் விழா மேடையில் அடையாள அட்டைகளை வழங்கினார்.

விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் பலன்பெற தமிழ்நாட்டில் இருந்து 42 ஆயிரம் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர்களில் ஒருவரான தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த விவசாயி சத்திய நாராயணனுக்கு, விழா மேடையில் பிரதமர் மோடி, விவசாயிகள் ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை வழங்கினார்.

மேலும், மாநில சட்ட சபைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தையும், சரக்கு முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நாடு முழுவதும் 462 ஏகலைவா மாதிரி பள்ளிகள் தொடங்குவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

எங்களது முதல் அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. இப்போது நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிற விவசாயிகளும், சில்லரை வர்த்தகர்களும், சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்களது வயோதிகத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

சிறுவிவசாயிகள், கடை வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தின் பலனை அடைய வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தோமானால், சுகாதார காப்பீடு, விபத்து காப்பீடு என்பது போதிய விவரமின்மையாலும், அதிக கட்டணங்களாலும் ஏழை எளிய மக்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கடுமையான ஒன்றாக இருந்தது. இப்போதோ ஒரு நாளைக்கு 90 காசுகள், மாதம் ரூ.1 கட்டணத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு பெறும் வசதி, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா, பீமயோஜனா, பிரதம மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. 22 கோடி பேர் இந்த காப்பீட்டின் கீழ் வந்து உள்ளனர்.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் 2 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு 8 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பழங்குடி மாணவ, மாணவிகளிடம் மறைந்துள்ள திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கு அவர்களை கல்வி கற்கச்செய்வது முக்கியம். இதற்காக 462 மாதிரி ஏகலைவா உறைவிடப்பள்ளிகள் அமைக்கும் திட்டம் தொடங்கி விட்டது. இந்த பள்ளிகளில் அவர்களுக்கு கல்வி மட்டுமல்லாது விளையாட்டு பயிற்சி, திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பதுடன் உள்ளூர் கலை மற்றும் கலாசாரமும் ஊக்குவிக்கப்படும்.

இப்போது இரண்டாவது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் 100 நாட்களில் நாடு டிரெய்லரைத்தான் பார்த்துள்ளது. முழு படமும் இனிதான் வர உள்ளது. (பலத்த கை தட்டல்)

ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழி குடிநீர் வழங்கும் திட்டத்தை இந்த அரசு நிறைவேற்றப்போகிறது. முத்தலாக் முறைக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்ட மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர், வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நாட்டை கொள்ளையடித்தவர்கள் அவர்களுக்கு உரித்தான சரியான இடத்தில் (சிறை) வைக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி சிலர் உள்ளே (சிறையில்) வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்துக்கும், கோர்ட்டுகளுக்கும் மேலானவர்கள் என்று தங்களை கருதியவர்கள் இப்போது ஜாமீனுக்காக கோர்ட்டு, கோர்ட்டாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

புதிய அரசு பதவி ஏற்றதும், பிரதம மந்திரி கிஷான் சமான் நிதி யோஜனா திட்டம் நாட்டில் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் விரிவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். இப்போது இந்த திட்டத்தின்கீழ் 6½ கோடி விவசாயிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply