இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் தேவையானதா? – ஆர்.கே.

Advertisements

இந்திய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டம் பலத்த எதிர்ப்புகளையும், ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.

இச்சட்டம் சொல்வது என்ன?  இச்சட்டம் எதற்காக? இந்திய குடியுரிமைச் சட்டம் நாடு சுதந்திரத்தின் போது பிரிவினையானது. அப்போது பாகிஸ்தானில் இருந்து வந்தர்களையும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களையும் முறைமைப்படுத்துவதற்காக  1955 ஆம் ஆண்டு  இந்தியக் குடியுரிமைச்  சட்டம்  கொண்டு வரப்பட்டது.  அச்சட்டத்தில்  பல  முறை  கொண்டு வரப்பட்ட போதும், இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பலத்த எதிர்ப்பை சந்திக்கிறது.

இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூடான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாகும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சம்பந்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இந்துக்கள், கிருத்துவர்கள், பார்ஸிகள், சிக்கியர்கள், பௌத்தர்கள், ஜெனர்கள் அடங்குவர்கள். மேற்படி பிரிவைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளானால், அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும் என்பதே. ஆனால் இதில் முஸ்லீம்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் இலங்கை தமிழர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜக அரசு சொல்லும் காரணம் முஸ்லீம்கள் அண்டை நாடுகளில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் என்றும், தமிழர்கள் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்றும் சப்பைக் கட்டு கட்டியுள்ளது. இலங்கையில் முஸ்லீம்களும், இந்துக்களும் சிறுபான்மை மக்கள். அவர்கள் மத துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது நிதர்சனம். ஆனால் அதை இந்த மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

அதோடு அல்கொயிதா, ரொகிங்கியா முஸ்லீம்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறியுள்ளது. ஆகையால் முஸ்லீம் பிரிவு சேர்க்கப்படவில்லை என்பது அரசு தரப்பில் வைக்கப்படும் நியாயம். ஆனால் இதை ஏற்காத நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் முஸ்லீம்கள் இது முஸ்லீம்களை இந்த நாட்டில் இருந்து அகற்றும் வேலை, இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. எதிர்கட்சிகள் போராட்டத்தை துண்டி விடுகின்றன என குற்றம் சாட்டியுள்ளது.

பல அறிஞர் பெரு மக்கள்,  முன்னாள்  நீதிபதிகள்  இது நாட்டின் அரசியல் அமைப்புக்கு விடப்பட்ட சவால் என்று சொல்லியுள்ளனர். இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லியுள்ளனர். நாட்டின் பொருளாதார சிக்கல், வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய இயலாத பாஜக, பிரச்சனைகளை திசை திருப்பச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதே தவிர, இப்போது இச்சட்டத்தைக் கொண்டு வர எந்த அவசியமும் இல்லை என்று கூறியுள்ளது.

நாட்டின் ஆறு மாநிலங்கள் கேரளா, மத்திய பிரதேஷ், பஞ்சாப்,  மேற்கு வங்கம்,  சட்டிஸ்கர்  போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளன.  இருந்த போதும் மத்திய அரசு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இப்படியாக நாட்டின் பெரும் பகுதிகளில் குழப்பமான சூழலை நிலவி வருகிறது. பல பகுதிகளில் முஸ்லீம்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிகள் தான் என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க ஆதாரங்களை தேடி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

அஸ்ஸாமில் பல பேருக்கு அவர்கள் இந்த நாட்டின் குடிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளன. அஸ்ஸாமில் மிகுந்த குழப்பங்கள் நிலவுகிறது. 15 லட்சம் முஸ்லீம்கள் நாட்டின் குடியுரிமையை இழந்துள்ளனர். இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் குடியுரிமை கணக்கெடுப்பு நடக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளதால், நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள முஸ்லீம்களிடம் ஒரு வித பதட்டம் நிலவுகிறது.

இது இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றும் முயற்சியே தவிர வேறு எதுவும் இல்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். எதுவாக இருந்தாலும், நாட்டின் இன்றைய நிலையில் இது தேவையில்லாத வேலை என்பதே பலரின் எண்ணம்.

You may also like...

Leave a Reply