பழிக்கு பழி? ஈரான் vs அமெரிக்கா

Advertisements

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீண்டும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் சுற்றுப்பயணம் செய்திருந்த ஈரானின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானியை கடந்த 5-ம் தேதி அமெரிக்கா திட்டமிட்டு கொன்றது. இதனால், ஆத்திரமடைந்த ஈரான், அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இதையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி, சுமார் 80 பேரை கொன்று குவித்தது ஈரான்.

இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானது. மேலும், ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தை, அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானம் எனக் கருதி, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில், 170 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த ஈரான் அதிபர், மன்னிக்க முடியாத தவறை இழைத்து விட்டதாகக் கூறினார்.

இந்த நிலையில், நேற்று (ஜன.,12) இரவு ஈராக்கில் அமெரிக்கப் படையினர் மீது ஈரான் ராணுவம் மீண்டும் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள அல் பலாத் விமான படைத் தளத்தில், அமெரிக்காவின் எப்16 ரக விமானங்களை பழுது நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த மையத்தின் மீது 8 கத்யுஷா வகை ராக்கெட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அநேகமாக, ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கான பழிக்கு பழியாகவே இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

You may also like...