ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா

Advertisements

நூறாவது நாள் படப்பிடிப்பு மொத்தமே 18 நாட்கள்தான் நடந்தது. டப்பிங், டபுள் பாசிட்டிவ் எல்லாம் ரெடி. ராஜா சாரின் பின்னணி இசை நாளுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் அவருக்கு வயிற்றில் எதோ சிறு பிரச்னை காரணமாக விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைக்கிறது. காரணம் ரிலீஸ் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர். வித்தியாச படமென்று தனக்கு பெயர் வரும் என்று காத்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஒரு குழப்பம் நிலவுகிறது.

அதே குழப்பத்தோடு அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் போய் அவரை சந்திக்கிறோம் நானும் இயக்குனரும். ’’நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆக ஒரு வாரமாவது ஆகும். அதுனால உன் படத்துக்கு அமரை (கங்கை அமரன்) வைச்சு ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சுக்க’’ என்கிறார் ராஜா. இயக்குனர் முகத்தில் கவலை ரேகை. அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது.

’’என்னய்யா யோசிக்கிற?’’ இது ராஜா

’’இல்ல. உங்க ரீ-ரீக்கார்டிங்காகவே சில இடங்களை ஷூட் பண்ணியிருக்கேன். நீங்க பண்ணா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற மாதிரி இருக்கும்… ஆனா படத்தோட ரிலீஸ் தேதி வேற ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அதான் ஒரே குழப்பமா இருக்கு…..’’ –இது மணிவண்ணன்

’’சரிய்யா ஒண்ணு பண்ணு. அதை வீடியோல காப்பி பண்ணிட்டு வா. இங்க ஒரு டிவி டெக் ஏற்பாடு பண்ணு. நான் படத்தை அதுல பாத்துட்டு நோட்ஸ் மட்டும் எழுதிக் கொடுக்கிறேன். அதை வச்சு அமர் ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சிடுவான்…’’ என்கிறார் ராஜா.

You may also like...