சீனாவில் சிக்கி உள்ள மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்

Advertisements

கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் சிக்கி உள்ள மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்


கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர்  பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது. வுகான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளது.

வுகானில் இன்னும் 250 இந்திய மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வுகானில்  இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பை  தடுப்பது மற்றும் எதிர்கொள்வது குறித்து இந்திய கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.


மேலும் வுகான் நகரில் சிக்கியுள்ள 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வர சீனாவிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதற்கான பணியை வெளியுறவு அமைச்சகம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
 சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்தியர்களை அழைத்து வர வுகான் நகரில் இருந்து மும்பைக்கு போயிங் 747 விமானத்தை இயக்க ஏர் இந்தியா தயார் நிலையில் உள்ளது. இதற்காக சீன அரசு, வுகான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு விமானம் இயக்கப்படும்.


இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா அதிகாரிகள், நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். விமான ஊழியர்கள், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர். வுகான் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள், எப்படி விமான நிலையத்திற்கு வருவார்கள் என்ற சிக்கல் உள்ளது. இந்திய தூதரகத்தின் உதவியுடன் இதற்கான தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து, அனுமதி கிடைத்தவுடன் விமானம் இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

You may also like...