குடமுழுக்குக்குத் தயாராகும் தஞ்சை பெரிய கோயில்

Advertisements

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழாவில், தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் குடமுழுக்கு தினத்தில் மட்டும் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. கோயில் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 1997-ம் ஆண்டில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது யாகசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 48 பேர் உயிரிழந்தனர். எனவே, இதை கவனத்தில்கொண்டு யாகசாலை பந்தலை கோயிலுக்கு வெளியே அமைத்து யாக பூஜை நடத்தி வருகின்றனர். அத்துடன் கோயிலுக்கு வரும் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க ஒவ்வொன்றையும் துல்லியமாகத் திட்டமிட்டு கவனமுடன் செயல்படுத்தி வருகின்றனர்.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!Submit

அதன்படி சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தினர் அதிநவீன சாதனங்களைக்கொண்டு கூட்ட நெரிசலைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காகப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோயில் வளாகத்தில் ராஜராஜன் வாயில், திருச்சுற்று மாளிகை உட்பட 12 இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் மென்பொருள் உதவியுடன் மடிக்கணினியில் கண்காணிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

இதுகுறித்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் புலப் பேராசிரியர் ராஜன் கூறுகையில், “கூட்டத்தைக் கண்காணிப்பதற்கென தனிப்பட்ட முறையில் மென்பொருளை உருவாக்கியுள்ளோம். இதில், கோயிலுக்குள் வரும் ஒவ்வொரு பக்தர்களையும் நவீன கேமரா மூலம் அவர் எங்கு செல்கிறார் என்பது மடிக்கணினியில் தெரியும் புள்ளியில் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இப்புள்ளி அவர்கள் வெளியே செல்வதையும் காட்டும்.

இதன் மூலம் கோயிலுக்குள்ளே எவ்வளவு பேர் வந்தார்கள், எவ்வளவு பேர் வெளியே சென்றார்கள் என தெரிந்துவிடும். கோயிலுக்குள் இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் இருக்கிறார்கள், இவ்வளவு பேர் வெளியேறிவிட்டனர் என்பதை அறியமுடிவதால், அடுத்து எவ்வளவு பேர் உள்ளே அனுமதிக்கலாம் என்பதும் தெரிந்துவிடும். இந்தத் தகவல் தொடர்ந்து காவல்துறையினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்படும். இதன்மூலம் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன், பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

சிசிடிவி கண்காணிப்பு
சிசிடிவி கண்காணிப்பு

மேலும், கோயிலுக்குள் ஒரே நேரத்தில் எவ்வளவு பேர் நிற்கலாம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரமான சூழல் ஏற்பட்டால் பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக இதைச் செயல்படுத்தி வருகிறோம். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அளவில் உள்ள குற்றவாளிகளின் பட்டியல் இந்த மென்பொருளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கோயிலுக்குள் வந்தால் இந்த மென்பொருள் அடையாளப்படுத்திக் காட்டிவிடும். இதுகுறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்படும். இதே முறையை திருவண்ணாமலை கோயில் விழாவில் கடைப்பிடித்ததால் தங்கச் சங்கிலியைத் திருடியவரைப் பிடிக்க முடிந்தது. அத்துடன் பெரிய கோயிலுக்கு இன்று காலை வந்த ஒருவர் பறக்கும் ட்ரோன் கேமரா கொண்டு வந்ததை இந்த மென்பொருள் மூலம் கண்டறியப்பட்டது. தடைசெய்யப்பட்ட எந்தச் சாதனம் கொண்டு வந்தாலும் உடனே லேப்டாப்பில் தெரிந்துவிடும். அது உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் குற்றச் செயல்களையும் இதனால் தடுக்க முடியும். சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

You may also like...