தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்

Advertisements

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ‘ஓம்நமசிவாய’ பக்தி கோஷம் விண்ணை முட்டியது


தஞ்சை பெரியகோவிலை 1010-ம் ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று குடமுழுக்கு நடந்தது.

இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூரார், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. அன்று புதிய கொடிமரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூர்வாங்க பூஜைகள் 1-ந் தேதி காலை வரை நடைபெற்றன. 30-ந் தேதி பெரியகோவில் விமான கோபுர கலசம் பொருத்தப்பட்டது. 31-ந் தேதி மற்ற சன்னதிகளின் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன.


பூர்வாங்க பூஜைகள் முடிவடைந்ததையடுத்து 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதற்காக பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இந்த யாகசாலை பூஜையில் 332 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் பங்கேற்றனர். இந்த யாகசாலையில் 2,600 கிலோ எடை கொண்ட 124 வகையான மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாத்ராதானமும், 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடந்தது. இசை வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்கள், சன்னதி கோபுரங்களுக்கு கடம் எடுத்து வரப்பட்டது.


பின்னர் அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீருடன் காலை 8.10 மணிக்கு ஏறினர். அதைத்தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டது. சரியாக காலை 9.23 மணிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதனையடுத்து விமான கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.
தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது கோவிலிலும், கோவிலுக்கு வெளியிலும் திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘ஓம் நமசிவாய’…, பெருவுடையாரே… ஈசனே… என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது.


பெரிய கோவிலில் இதுவரை சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது முதன்முறையாக சமஸ்கிருதத்துடன், தமிழ் மொழியிலும் குடமுழுக்கு நடந்துள்ளது.
அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கும், தீபாராதனையும் நடை பெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பக்தர்கள் கேரளாந்தகன் கோபுரத்தின் அருகே சென்று மதில் சுவர் வழியாக தெற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக வராகி அம்மன் சன்னதி அருகே சென்று அங்கு பக்தர்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புக்கம்பிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் அருகே முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர். முருகன் சன்னதிக்கும், பெரியநாயகி அம்மன் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகவும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று இரவு முதலே வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் பெரியகோவில் முன்புறம் உள்ள சாலை ஓரங்களில் அமர்ந்திருந்தனர்.

காலை 4 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது. சாரை, சாரையாக பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது முதலே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலை சுற்றி உள்ள சாலைகள், மேம்பாலம், மாடி வீடுகளில் நின்றும், அமர்ந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கை கண்டு தரிசனம் செய்தனர்.


மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்தது. குடமுழுக்கையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.
மேலும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் குடிநீர் வசதி, இளைப்பாருவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

You may also like...