அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1 நன்கொடை

Advertisements

அயோத்தியில்  ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1 நன்கொடை  அறக்கட்டளையில் ஒப்படைப்பு


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியாக நீடித்து வந்த 2.77 ஏக்கரில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு இதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கடந்த நவம்பர் 9-ந்தேதி அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை மத்திய-மாநில அரசுகள் தொடங்கி உள்ளன. இதற்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்து உள்ளது. இந்த தகவலை பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களவையில் வெளியிட்டார்.

15 உறுப்பினர்கள் நியமனம்
இந்த அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இருக்கும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. எனினும் தற்போது டெல்லியில் உள்ள மூத்த வக்கீல் பராசரனின் வீட்டில் தற்காலிகமாக இயங்கும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்த அறக்கட்டளைக்கு 15 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் மூத்த வக்கீல் பராசரன், ஜகத்குரு சங்கராச்சாரியா, சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதி மகராஜ், யுகபுருஷன் பரமானந்த் மகராஜ், சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ், அனில் மிஸ்ரா, காமேஷ்வர் சவுபால், மகந்த் தினேந்திர தாஸ் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.


உள்துறை செயலாளர்
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ள நிலையில், இந்த கட்டுமான பணிகளுக்காக நன்கொடை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ராமர் கோவிலுக்காக நன்கொடைகள், மானியங்கள், சந்தாக்கள், உதவிகள் அல்லது பங்களிப்புகளை பணமாகவோ, அசையும், அசையா சொத்துகளாகவோ எந்தவித நிபந்தனையும் இன்றி ஏற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


இந்த நிலையில் ராமர் கோவிலுக்கு முதல் நன்கொடையாக மத்திய அரசு ரூ.1 வழங்கி இருக்கிறது. இந்த தொகையை மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சக செயலாளர் மர்மு ராமர் கோவில் அறக்கட்டளையிடம் வழங்கி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

You may also like...