கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை

Advertisements

கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை அமெரிக்க அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


தமிழகத்தை தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு தமிழகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய்க் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


அதன் நீட்சியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதோடு நின்றுவிடாமல், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு அங்கு உள்ள தொழிற்சாலைகளை பார்வையிட்டதோடு, தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சாதகமான நிலையையும், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளையும் விளக்கி கூறி அந்நாட்டு தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்தினார்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்வடிவத்தில் கொண்டு வந்து தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


அதன்படி அந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட உள்ளது.


கடலூரில் அமைய உள்ள இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் ‘பெட்ரோ ரசாயன’ பொருட்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலையை அமெரிக்காவை சேர்ந்த ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் நிறுவ உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க சென்றிருந்த போது ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் கொள்கை ரீதியான ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.


தற்போது, அதன் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்காக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் சென்னை வந்தனர். ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது கடலூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

You may also like...