டெல்லி சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு

Advertisements

ஆட்சியை பிடிக்கப்போவது யார்?டெல்லி சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு


70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டசபைக்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிற தேர்தல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்காக முதல்-மந்திரி கெஜ்ரிவாலும், பாரதீய ஜனதாவுக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரசுக்காக அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
இந்த தேர்தலில் 1 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 136 வாக்காளர்களுக்காக 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான மின்னணு வாக்கு எந்திரங்களும், பிற உபகரணங்களும் நேற்று மாலை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.


பலத்த பாதுகாப்பு
மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் 2,689 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும், அதில் 545 வாக்குச்சாவடிகள் மிக மிக பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால் தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார் 40 ஆயிரம் பேரும், மத்திய ஆயுதப்படை போலீசார் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 19 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.


ஓட்டு எண்ணிக்கை
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

You may also like...