சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை (கொரோனா வைரஸ்)

Advertisements

சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை கொரோனா வைரஸ் பீதி எதிரொலி

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அங்கு தொடர்ந்து ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 811 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தியாவும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு விமான சேவை ரத்து, சீன நாட்டினருக்கான இ-விசா ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அத்துடன் சீனாவில் வசித்து வந்த ஏராளமான இந்தியர்களையும் மீட்டு தாய்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக தற்போது சீனாவுக்கு சென்று விட்டு இந்தியா வரும் வெளிநாட்டினருக்கும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், ‘சீனாவுக்கு கடந்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதியோ அல்லது அதற்கு பின்னரோ சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை. அது வான், கடல் அல்லது நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் நிலப்பகுதி எல்லை வழி என எந்த வழியிலும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல சீனர்களுக்கு கடந்த 5-ந் தேதிக்கு முன் வழங்கப்பட்டிருந்த அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேநேரம் சீனா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த விமானப்பணியாளர்களுக்கு இந்த விசா கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

You may also like...