ப.சிதம்பரத்துக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி-மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா?

Advertisements

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு வாழ்த்து:  மாநில காங்கிரசை கலைத்துவிடலாமா?  ப.சிதம்பரத்துக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி


டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த டுவிட்டர் செய்தியை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி
ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் பறந்துக்கொண்டிருக்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, நேரடியாகவே காட்டமான விமர்சனத்தை பதிவு செய்தார்.
ப.சிதம்பரத்தின் கருத்தை இணைத்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து உள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மியின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள். உங்களுக்கான மரியாதையை கொடுத்து கேள்வியொன்றை முன்வைக்கிறேன். பா.ஜனதாவை தோற்கடிக்கும் பணிக்காக காங்கிரஸ், மாநில கட்சிகளை வெளிப்பயணியாளர்கள் அடிப்படையில் நியமனம் செய்துள்ளதா? அப்படி இல்லையென்றால் நம்முடைய தோல்வியை பற்றி கவலைக்கொள்ளாமல் ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? ஒருவேளை என்னுடைய கேள்விக்கு ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால், நாம் ஏன் மாநில காங்கிரசை மூடிவிட்டு செல்லக்கூடாது! என பதிவிட்டார். அவருடைய கருத்துக்கு பலர் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like...