உசேன் போல்டுக்கு டஃப் கொடுக்கும் கர்நாடக இளைஞர்

Advertisements
சீனிவாச கௌடா

கர்நாடகாவில், பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்றான கம்பளா போட்டியில், 142.50 மீட்டர் தூரத்தை 13.62 விநாடிகள் கடந்து அசத்தியிருக்கிறார், சீனிவாச கௌடா என்ற இளைஞர்.

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் நடைபெறும் பாரம்பர்ய விளையாட்டுகளில் முக்கியமானது, கம்பளா. தண்ணீர் நிரப்பிய வயல்வெளியில் எருமைகளுடன் குறிப்பிட்ட போட்டி தூரத்தை ஓடிக் கடப்பதுதான் கம்பளா போட்டி. மங்களூருவில் நடைபெற்ற போட்டியில், போட்டி தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து, அதில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்துவந்த சாதனையை முறியடித்திருக்கிறார், சீனிவாச கௌடா. பந்தய தூரமான 142.50 மீட்டர் தூரத்தை அவர், 13.62 விநாடிகளில் கடந்திருக்கிறார்.

சீனிவாச கௌடா
சீனிவாச கௌடா

இதனால், 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்டுடன் அவரை ஒப்பிட்டு, நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். சீனிவாசன், 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்ததாகவும் குறிப்பிட்டுப் பேசிவருகிறார்கள். ஆனால், 9.58 விநாடிகளில் அந்த தூரத்தைக் கடந்த உசேன் போல்டே, உலக அளவில் அதிவேகமான மனிதர் என்ற உலக சாதனையைத் தன்வசம் வைத்திருக்கிறார்.

மங்களூருவை அடுத்த மூடாபித்ரி கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சீனிவாச கௌடா, தொடர்ச்சியாகப் பல்வேறு கம்பளா போட்டிகளில் கலந்துகொண்டுவருகிறார். சீனிவாச கௌடா குறித்துப் பேசிய மங்களூரு பகுதியில் நடைபெற்ற அய்கலா கம்பளா போட்டியின் நடுவர்களுள் ஒருவரான விஜய்குமார், “இந்தப் பகுதியில் நடைபெற்ற 12 கம்பளா போட்டிகளில் கலந்துகொண்டு சீனிவாச கௌடா, இதுவரை 29 பரிசுகளை வென்றிருக்கிறார். குறிப்பாக, அய்கலா போட்டியின் 4 பிரிவுகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்று, அவர் புதிய சாதனை படைத்திருக்கிறார்” என்றார்.

You may also like...