கொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)

Advertisements

ஆர்.சி. இரவிச்சந்திரன் (சின்னத்திரை இயக்குனர்)

சுதந்திரமாக சுற்றித்திரியும் கோழி குஞ்சுகளை,  கொத்த வரும் கழுகோடு தாய் பறவை போராடி, தன் குஞ்சுகளை காப்பாற்றும். அப்படி தாய் பறவையாக இருந்து,  கோழி குஞ்சுகளாகிய எங்களை காப்பாற்ற போராடும் மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுக்கும், இறைவனால் தூதுவர்களாக அனுப்பப்பட்டுள்ள மருத்துவர்களுக்கும்,  காவல் துறையினருக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் கட்சி பாகுபாடின்றி போராடும் அனைவருக்கும் அனைத்து மக்களின் சார்பாக நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

உலகம் முழுக்க மால்கள், தியேட்டர்கள்  மூடப்பட்டாலும், வீட்டை விட்டு  வெளியே வரக் கூடாது என்று உத்தரவு  போட்டாலும், பல லட்சம் கோடி இழப்பைப்  பெற்றாலும், பிரச்சனைகளை  தள்ளிப் போடலாமே தவிர நிரந்தர தீர்வு காண முடியாது. நான் சொல்ல வரும் சில விஷயங்கள் பலருக்கு முட்டாள்தனமாகவும், நகைச்சுவையாக இருந்தாலும் ,   அனைவரும் சந்தோஷமாக இருக்க  வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு  தெரிஞ்சதை சொல்ல வேண்டியது, அனைவரில் ஒருவரான என்னுடைய  கடமையாகும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணம் நாம்தான். ஆரம்பத்தில் மனிதன்  இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான். அப்போது ஏதுவும் பிரச்னை இல்லை. பின் தன் சுய நலத்திற்காக இயற்கையை மீறி வாழ  ஆரம்பித்தான். அப்போதிலிருந்து இயற்கை அவனை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டது.

தற்போது நாகரீகம் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் இயற்கையை மீறிய குற்றத்தோடு அதை பகைத்துக் கொண்டும் (எதிர்த்துக் கொண்டும்) வாழ  ஆரம்பித்துவிட்டான். அதனால் இயற்கை நம்மீது கொண்ட கோபத்தின் ஆரம்ப வெளிப்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

பூமியின் மையப்புள்ளிலிருந்து,  சில திசைகள்,  இயற்கை  சீற்றத்தாலும்,.  சில திசைகள், மனிதனை மனிதன் அடித்துக் கொள்வதாலும், சில திசைகள், கொடிய நோய்களாலும், அழியும் என்பது ஆன்மீகத்தின் அடிப்படையில் முன்பே கூறப்பட்டுள்ளது.  அதன்படியே கலியுகத்தின் சங்கமயுகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. காரணம் உலகம் முழுவதும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்விக் கொண்டிருக்கிறது.

இயற்கையை முழுவதுமாக கட்டுப்படுத்தக் கூடிய உரிமை கடவுளுக்குக்கூட இல்லை. காரணம் நாம் செய்த, செய்து கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப, (வினைக்கேற்ப)  இயற்கையிடமிருந்து நாம் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.  (சம்பளம்  என்பது  வாழ்க்கை).

கடவுள் வழிபாடு என்பது நாம் செய்த வினையால் ஏற்படும் கஷ்டத்தின் தாக்கத்தை குறைக்குமே தவிர முற்றிலும் தீர்க்காது.

ஆனால் எல்லவாற்றையும் தீர்த்து சந்தோஷமாக வாழும் சக்தியையும், தகுதியையும் கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். அதற்காக கடவுள் இரண்டு கட்டளை போட்டுள்ளார். ஒன்று சுய ஒழுக்கம், மற்றோன்று நேர்மை. சுய ஒழுக்கம் என்பது, அணியும் ஆடையில் தொடங்கி,  தூய மனதோடு            அனைவரிடமும் பேசி பழகுவது,  குப்பையை  ரோட்டில்   வீசி  எறியாமல்  இருப்பது, போக்குவரத்து விதி மீறல்கள்  செய்யாமல் இருப்பது, அரசு தனக்கு தரும் மானியத்தை தவறாக பயன்படுத்தாமல் இருப்பது,  இயற்கையை பாதுகாப்பது,. சாப்பிடும்போது நன்றி உணர்வோடு கவனம் முழுவதையும் உணவின் மீது வைப்பது  உட்பட பல….

நேர்மை என்பது அடுத்தவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாமல்  இருப்பது, சுய நலத்திற்காக ஏதோ நாம் நிரந்தரமானவர்கள் என்ற நினைப்பில் கௌரவமான போர்வையை போர்த்திக் கொண்டு கையூட்டு பெற்றும், பிறர் பொருளை அபகரித்தும், கொள்ளையடித்தும் சேர்ப்பதை தவிர்ப்பது,  பிறர் நமக்கு எதை செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ, அதை நாம் பிறக்கு செய்யாமல் இருப்பது உட்பட  பல……

அடுத்து, இருட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் இராமகிருஷ்ணன் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டும் பட்சத்தில்,  அருகே  இருந்த மசூதியை பார்த்து  அல்லா என்னை காப்பாத்து  என்று கூவினால்,  தம்பி நீ ஒரு இந்து உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று அல்லா ஒரு போதும் கைவிடமாட்டார்.  அதேபோல ஒரு ஆபத்தில் மாட்டும் பஷீர் அஹமது அருகே இருந்த  ஈஸ்வன் கோவிலைப் பார்த்து ஈஸ்வரா என்னை காப்பாற்று என்று கூவினால், தம்பி நீ ஒரு  இஸ்லாமியர் உன்னை காப்பாற்ற மாட்டேன்  என்று சிவன் ஒரு போதும் கைவிடமாட்டார்.

ஏனெனில் அல்லா, ஏசு, சிவன் உட்பட அனைத்துக் கடவுளும் மகா சக்தி கொண்டவர்கள்.   யாரும் யாரையும் கைவிடமாட்டார்கள்.  அவர்களை பொறுத்தவரை நாம் அனைவரும் மனிதயினம். அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.  மேலும் அவர்கள் நம்மை நல்ல ஒழுக்க நெறியில் வாழச் சொல்லி.  சுத்தமான சந்தோஷமான உலகிற்கு செல்ல  வழிகாட்டுபவர்கள்.

மதம் என்பது வழிபாடு முறை மட்டுமே.  எனவே நாம் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து அல்லா, ஏசு, சிவன் உட்பட அனைத்துக் கடவுளின் ஆசியையும், அருளையும்  துணையாகக் கொண்டு சுய ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகை காப்பாற்ற வாய்ப்புண்டு.  இல்லையேல் கொரானா போன்றும், சுனாமி, பூகம்பம், புயல் மழை, மனிதபோர் என்றெல்லாம் ஏற்பட்டு ,  உலகம் அஸ்தமனமாகும் படிப்படியாக.

அழிவு என்பது அனைவருக்கும் பொதுவானது. அது, நேர்மையானவர்களுக்கு வரமாகவும் நேர்மையற்றவர்களுக்கு தண்டனையாகவும் அமையும்

தீதும் நன்றும் பிறர்  தர  வாரா

You may also like...