திருமழிசையில் நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்.

Advertisements
 நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம்;  திருமழிசையில் ரூ.150 கோடியில் அமைகிறது

சென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை, குத்தம்பாக்கத்தில், நான்காவது புதிய புறநகர் பேருந்து நிலையம், 150 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.

சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, 2002ல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், சென்னையில் இருந்து வெளியில் செல்வதற்குள், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, மாதவரம், வேளச்சேரியில், புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், மாதவரம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வேளச்சேரி திட்டம் கைவிடப்பட்டு, தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்ல, வண்டலுார், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அதில், 40 ஏக்கரில், 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2019ல் துவங்கின.

இந்நிலையில், நான்காவதாக, திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, தமிழக அரசு, 2019ல் அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, இதற்காக, 20 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 150 கோடி ரூபாயில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

You may also like...