தொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.

Advertisements

சமீபத்திய ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவு கலைஞர் நட்டி என்ற நடராஜன் எழுப்பிய கருத்துக்கள் சினிமா உலகில் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.

ஏ.ஆர். ரகுமான் ஹிந்தி திரை உலகம் தன்னை ஓரம் கட்டுவதாகவும், காலங்கள் போனால் திரும்ப கிடைக்காது என்று சில கருத்துக்களை பொத்தாம் பொதுவாக, அவருக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை வெளியிடாமல் கூறிய கருத்துக்கள் பொது வெளியில் பல மாறுபட்ட கருத்துக்களை சொல்லக் கூடிய, விவாதப் பொருளாக மாறிவிட்டது.

இருபத்தைந்து ஆண்டுகளாக 150 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஏ.ஆர். ரகுமான், அதில் பல ஹிந்தி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். அப்படியிருக்க சமீபத்திய இக்கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இக்கருத்தைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நடராஜன் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையில் கதாநாயகனாக அறிமுகமானவர். ஹிந்தியில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர். ரகுமான் கருத்தை தொடர்ந்து அவரின் கருத்து தமிழ் திரை உலகை சாடுவதாக இருந்தது, அவர் கூறுகையில், தமிழ் திரை உலகில் வாரிசுகளும், குரூப்பிசமும் கோலோச்சுவதாகவும், உண்மையான கலைஞர்களுக்கு அது பெரும் தடையாகவும், வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் பேசியிருந்தார். தமிழ் திரையுலகம் யாராலோ வழி நடத்தப்படுகிறது. ஒரு சுதந்திர போக்கு இங்கு இல்லை என்பது அவரின் கருத்தாக இருந்தது.

ரகுமான் கருத்தை தொடர்ந்து, அவருக்கு பதிலடி கருத்தாக இது இருந்தது. நீ ஹிந்தியை சொன்னால், தமிழில் என்ன லட்சணம் இருக்கிறது என்ற எதிர் கேள்வியாக உடனடியாக சொல்லப்பட்டது. இது பொதுவாக அனைத்து திரையுலகத்திலும் உள்ள குறைகளை சுட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இல்லை ஹிந்திக்கு எதிர்ப்பான குரலுக்கு, ஆதரவு குரலாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

எது எப்படியாக இருந்தாலும், இத்தகைய போக்கு நெடுங்காலமாக திரையுலகில் இருந்து வருகிறது. நடிகர் கமலஹாசனுக்கும் இதை போல் சர்ச்சை கிளம்பியது உண்டு. திரைப்பட விருது வழங்குதலிலும் இதை குழப்பம் நீடிக்கிறது. இது வடமாநிலங்கள், தென்மாநிலங்கள்கிடையே உள்ள ஒரு ஆரிய, திராவிட பாகுபாடகவும் அரசியல் ரீதியாக பார்க்கப்பட்டு, தமிழக அமைச்சர் ஒருவரும் ரகுமானுக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார்.

சினிமாவில் திறமை மட்டுமே போதுமானது என்ற நிலை மாறி, ஜாதி, மதம், இனம், என்ற அரசியல் கலப்பில் கலைஞர்கள் சிக்குண்டு கொள்ளுவது ஆரோக்கியமான சினிமாவுக்கு வேட்டு வைப்பதாகும். இதை ஒட்டு மொத்த சினிமா உலகமும் புரிந்து கொண்டால், சர்ச்சைகள் கிளம்பாது. ஆரோக்கியமான சினிமாவுக்கு ஆரம்பமாக இருக்கும்.

 

You may also like...