ஆன்லைனில் ஆடு வியாபாரம்

Advertisements

ஆன்லைன் ஆடு வியாபாரம்
அடுத்த ஓரிரு தினங்களில் பக்ரித் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பக்ரித்தின் முக்கிய அங்கமே ஆடுகள்தான். இதையொட்டி, பாகிஸ்தானில் சந்தைகளில் ஆடு வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.

பாகிஸ்தானில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சந்தைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா அச்சுறுத்தல் மேலும் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆடுகளை ஆன்லைனிலேயே வாங்கிக்கொள்ளும்படி மக்களிடம் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நகர்ப்புறங்களிலேயே பெரும் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் மாபெரும் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அச்சத்திற்கு இடையே சந்தைகள் அரைநாள் மட்டுமே இயங்க வேண்டுமென அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அரசின் புதிய கட்டுப்பாடுகளால் சந்தைகளில் கூட்டம் தற்போது குறைந்துள்ளது. கூட்டத்தை மேலும் குறைக்கும் நோக்கில், மக்களை ஆன்லைனிலேயே ஆடுகளை வாங்கவும், விற்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு வியாபாரிகள் தங்கள் ஆடுகளை ஆன்லைனில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதற்கு ஏதுவாக புதிய ஆப்களும், இணையதளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் வியாபாரிகள் ஆடுகளின் எடை, விலை, புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றி ஜோராக வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை 2,70,000க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 26ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 1,200 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

You may also like...