விவசாய போராட்டம் வெற்றியா?
சோழ மண்டலம் சோறுடைத்து என்பர். தஞ்சை நெற்களஞ்சியம் அனைவருக்கும் உணவளித்தது போய், அதன் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலை தொடர்கிறது.
தமிழகத்தின் வரலாறு காணத வறட்சிக்கு, பெரிதும் பலியாகியது தமிழக விவசாய பெருங்குடி மக்களே.
தமிழக அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் போதவில்லை என்றும், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சொல்லியும் கடந்த 42 நாட்களாக தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் தென்னக நதிநீர் இணைப்பு சங்க தலைவரும், விவசாயிமான அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகிறார்கள்,
பல்வேறு போராட்ட யுத்திகளை கடைபிடித்து போராடி வரும் விவசாயிகளுக்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. வரும் 25-ம் தேதி தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, சர்வ கட்சிகளின் பொது வேலை நிறுத்ததால் தமிழகம் ஸ்தம்பிக்க இருக்கிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை செவி மடுத்து, செயல்படுத்துமானால் அது விவசாயிகளின் வெற்றியாக இருக்கும். அனைவரும் எண்ணமும் விவசாயிகளின் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதாகவே உள்ளது.
ஏழை விவசாயி உயிர் வாழ்ந்தால் பயிர் வாழும். உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார். மற்றவர் தொழுதுண்டு பின் செலல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப. அனைவரும் விவசாயிகளின் பின் செல்ல வேண்டிய வரலாற்று கடமை அனைத்து தமிழருக்கும் உள்ளது. வரப்புயர நீருயரும், நீருயுர நெல்லுயரும், நெல்லுயர குடியுரும், குடியுர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்ற ஒளவை பாட்டி பாடலை மனதில் கொண்டாலே அனைத்து பிரச்சனைகளும் அகலும். தமிழகத்தின் நீராதாரங்களை உடன் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதை பாதுகாப்பதில் அதிக சிரத்தையும், உளப்பாடும் தேவை. தற்காலிக தீர்வு அவசியம் என்பதோடு, நிரந்தர தீர்வே நிஜ தீர்வாக இருக்கும். அதுவே விவசாயிகளின் இறுதி வெற்றியாக இருக்கும்.