சரிவை எதிர்நோக்கும் பின்னலாடைத் துறை

Advertisements

யூரோ, டாலர் மதிப்புக் குறைவு:

knitting

அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் மதிப்பு கடந்த ஓராண்டில் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அவற்றின் பாதிப்பு இந்திய பின்னலாடைத் துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் பின்னலாடைத் துறை சரிவை எதிர்கொள்ளும் சூழல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜிம்பாப்வே, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பகுதிகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்களை அளிக்கும் நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் பயன்படுத்தும் கரன்சி மதிப்பில் வேறுபாடுகள் உள்ளன. எனவே அவை அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூனியனின் யூரோ போன்ற கரன்சிகளைக் கொண்டு சர்வதேச வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இந்தியாவுக்கான முக்கிய ஏற்றுமதித் தளங்களாகவும், அதிக ஆர்டர்களை அளிப்பவையாகவும் உள்ளன.
சமீப காலமாக இந்நாடுகளில் பயன்படுத்தப்படும் யூரோ, டாலர், பவுண்ட் ஆகியவற்றின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 22-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய ரூபாய்க்கான அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 64.65-ஆகவும், யூரோவின் மதிப்பு ரூ. 69.35-ஆகவும், பிரிட்டன் பவுண்ட் மதிப்பு ரூ. 82.86-ஆகவும் இருந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேற்கூறப்பட்ட பணங்களுக்கான மதிப்பு பெருமளவு சரிந்துள்ளது. ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நீண்ட கால அளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பவுண்ட் மதிப்பைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் ரூ. 100-க்கும் மேல் இருந்த அதன் மதிப்பு தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. அமெரிக்க டாலரை பொருத்தவரை, 2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மதிப்பில் ரூ. 69 வரை வீழ்ச்சி அடைந்து, தற்போது மீண்டுள்ளது. இந்திய மதிப்பில் கடந்த ஆண்டில் ரூ. 75-க்கும் மேல் இருந்த யூரோவும் தற்போது சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச கரன்சி சந்தையில் ரூபாய் மதிப்பு உயர்வு என்பது நல்லதே. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வது ஒருபுறம் இருந்தாலும், இந்திய பின்னலாடைத் துறை உள்பட அனைத்து வித ஏற்றுமதிக்கும் இது நன்மையளிக்கும் விஷயமாக இல்லை.
நாட்டின் அன்னியச் செலாவணியில் பின்னாலடைத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் இருந்து ரூ. 55 ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் சர்வதேச நாடுகளுக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில், திருப்பூரிலிருந்து மட்டும் ரூ. 24 ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மொத்த ஏற்றுமதி மதிப்பில் இது 46 சதவீதமாகும்.
சரிவால் குறைந்த விலை
இதில், யூரோவின் சரிவால், அதற்கு முன்னதாக தங்களது ஆர்டர்களுக்குப் பெற்ற தொகையிலிருந்து 15 சதவீதம் வரை தற்போது விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள். ரூ. 100 பெற்ற இடத்தில் தற்போது ரூ. 85 மட்டும் கிடைக்கிறது, ஆனால், கடந்த ஓராண்டில் நூல் விலை, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு போன்றவை அதிகரித்துள்ளன எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆர்டர்களின் விலை குறைந்து, பொருளின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது. ஆர்டர்களின் விலை குறைவது போல, உற்பத்திக்கான செலவைக் குறைக்க முடியாது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பின்னடைவை சந்திக்கும் நிலை உள்ளது.
இதேநிலை தொடர்ந்தால் உரிய விலை கிடைக்காமல் ஆர்டர்களைப் பெற இந்திய ஏற்றுமதியாளர்கள் பின்வாங்கும்போது, அந்த ஆர்டர்கள் நமது போட்டியாளர்களாக உள்ள சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவில் பின்னலாடைத் துறை சரிவை சந்திக்கும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கச் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆர்டர்களுக்கான விலையில் கடந்த ஓராண்டில் மட்டும் 20 சதவீதம் குறைந்துள்ளது. டாலரை பயன்படுத்தும் நாடுகளின் விலையில் 10 சதவீதத்தைக் குறைந்துள்ளது. இதனால் ஏற்கெனவே பிற நாடுகளுடன் போட்டி போட்டு ஆர்டர்களை எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆர்டர்கள் கைநழுவிப் போவதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் உள்பட அனைவரையும் அது பாதிக்கும்.
பின்னலாடைத் துறையில் ஆர்டர்களைப் பெற சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அளிப்பதால், ஆர்டர்களைப் பெற அவர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
எனவே, பின்னலாடைத் துறையினர் தங்களது சவால்களை எதிர்கொள்ள, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சலுகைகளை அறிவிப்பதுடன், முன்கூட்டியே திட்டங்களையும் வகுக்க வேண்டும். மொத்த ஏற்றுமதி அளவில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசால் திரும்ப அளிக்கப்படும் 7 சதவீத (டிராபேக்) சலுகை மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com